டாக்சி, தனியார் வாடகை கார் ஆகியவை சென்ற ஆண்டு வழங்கிய சேவைகள் குறித்து இங்குள்ள பயணிகளின் திருப்தி நிலை குறைந்துள்ளது.
பொதுப் போக்குவரத்து மன்றத்தின் வருடாந்தரக் கருத்தாய்வில் இது தெரியவந்தது.
டாக்சி சேவைகள் குறித்த பயணிகளின் திருப்தி நிலை, 2021ஆம் ஆண்டில் சராசரியாக 8.5 புள்ளிகளாகப் பதிவானது. சென்ற ஆண்டு அது 8.1ஆகக் குறைந்தது. காத்திருக்கும் நேரம் குறித்து அதிகமானோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதனை அடுத்து டாக்சி நிறுத்தங்கள் எளிதில் அணுகும் இடத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு தனியார் வாடகை கார்கள் வழங்கிய சேவைக்கான திருப்தி நிலையும் 0.4 புள்ளி குறைந்தது.
இதிலும் காத்திருப்பு நேரம் குறித்து அதிகமானோர் அதிருப்தி அடைந்தனர். அடுத்த நிலையில் ஓட்டுநர் வழங்கிய சேவை திருப்தி அளிக்கவில்லை என்று பயணிகள் கூறினர்.
இரு பிரிவுகளையும் சேர்த்து 2022க்கான ஒட்டுமொத்த பயணிகள் திருப்தி நிலை, 8 புள்ளிகளாகக் குறைந்தது. அதற்கு முந்தைய ஆண்டு அது 8.4ஆக இருந்தது.
கருத்தாய்வு, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதிக்கும் 14ஆம் தேதிக்கும் இடையில் நடத்தப்பட்டது.
இதில் டாக்சி அல்லது தனியார் வாடகை காரில் பயணம் செய்யும் 2,701 பேர் கலந்துகொண்டனர்.
அவர்கள் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை இத்தகைய சேவையைப் பயன்படுத்தியவர்கள். கருத்தாய்வில் பங்கெடுத்த அன்றும் டாக்சி, தனியார் வாடகை கார் சேவையை அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் சென்ற ஆண்டு அகற்றப்பட்ட பிறகு இத்தகைய சேவைகளுக்கான தேவை அதிகரித்தது.ஆனால் அது சரிவர ஈடுகட்டப்படவில்லை என்பதைச் சுட்டிய வல்லுநர்கள், பயணிகளின் அதிருப்திக்கு இது காரணமாக இருக்கக்கூடும் என்றனர்.
கட்டணங்கள் உயர்ந்ததால் முன்பு வழக்கமாக இச்சேவைகளை நாடிய பலரும் இப்போது தவிர்ப்பதாகப் பயணிகள் கூறுகின்றனர். கார் பகிர்வுச் சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.
டாக்சி அல்லது வாடகை கார் ஓட்டுநர்களைப் பொறுத்தவரை கட்டண உயர்வு மகிழ்ச்சி தருவதாகவே இருக்கும் என்கின்றனர் கவனிப்பாளர்கள். எரிபொருள் விலை உயர்வை அவர்கள் சுட்டுகின்றனர்.

