சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் சொகுசு கூட்டுரிமை வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றின் விற்பனை சரிந்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வால் அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற கவலைக்கிடையே இத்தகைய வீடுகளை வாங்கும் வெளிநாட்டுப் பணக்காரர்கள் பலரும் தயக்கம் காட்டியது இதற்குக் காரணம்.
அடுக்குமாடி சொகுசு வீடுகளின் விற்பனை 2022ன் நான்காம் காலாண்டில் 33.6 விழுக்காடு குறைந்தது. சென்ற ஆண்டு முழுவதுக்குமான விற்பனை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.1 விழுக்காடு குறைவு.
சொகுசு வீடுகள் விற்பனை தொடர்பில் நேற்று வெளியான ஹட்டன்ஸ் ஏஷியா ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு ஆக அதிகமாக விற்கப்பட்ட அடுக்குமாடி சொகுசு வீடுகள், சதுர அடிக்கு $6,057 வரை கைமாறின.
பெரும்பாலும் சீனா, அமெரிக்கா, இந்தோனீசியா, மலேசியா ஆகியவற்றைச் சேர்ந்தோர் இத்தகைய வீடுகளை வாங்கிஉள்ளனர்.
சீனா தற்போது அதன் எல்லைகளைத் திறந்திருப்பதால் சிங்கப்பூரில் இவ்வாண்டு சொகுசு வீடுகளின் விற்பனை உயருமென்று ஆய்வு கூறுகிறது.
சீனப் பெரும் பணக்காரர்கள் இங்கு பெரிய அளவிலான வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுவதை அது சுட்டியது. இவ்வாண்டு 40 முதல் 50 பங்களாக்கள் விற்பனை ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

