செய்திக்கொத்து

3 mins read
16e21226-d53e-4861-afea-b80b3fa7b5a6
-

இந்தோனீசிய சந்தையில் ஈடுபட அதிக நிறுவனங்கள் நாட்டம்

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் கொவிட்-19 தொற்றுப் பிடியில் இருந்து மீண்டு வேகமாக பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றன. இந்த நிலையில், மேலும் அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தோனீசிய சந்தையில் ஈடுபட்டு தொழிலை விரிவுபடுத்த விரும்புகின்றன. இதற்காக அவை உதவி நாடுகின்றன.

இந்த வட்டாரத்தின் ஆகப் பெரிய பொருளியல் நாடாக இந்தோனீசியா திகழ்கிறது. அந்தச் சந்தையில் தங்கள் பொருள்களையும் சேவைகளையும் காசாக்க விரும்பி, அதன் தொடர்பில் உதவி நாடி, சென்ற ஆண்டில் 297 நிறுவனங்கள் சிங்கப்பூர் தொழில்துறை கூட்டமைப்பை நாடின.

இந்த எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 185 ஆகவும் 2020ஆம் ஆண்டில் 78 ஆகவும் இருந்தது.

இந்தக் கூட்டமைப்பு, உலக அளவில் விரிவடைய விரும்பும் உள்ளூர் நிறுவனங்களுக்கு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் சேர்ந்து உதவி வருகிறது.

வீட்டு வாடகை: ஹாங்காங்கை சிங்கப்பூர் நெருங்குகிறது

சிங்கப்பூரின் வீட்டு வாடகைச் சந்தை ஹாங்காங்கின் சந்தையைப் போல் ஆகி வருகிறது.

சிங்கப்பூரில் வாடகைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டு இருப்பதால் வாடகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஹாங்காங்கில் வாடகை வீடுகளுக்குக் கிராக்கி குறைகிறது. பகுப்பாய்வாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் வாடகைக் கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படத்தக்கூடிய பல அம்சங்களும் தொடர்ந்து அப்படியே இருந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் வீட்டு வாடகை இந்த ஆண்டில் மேலும் 10% முதல் 15% வரை கூடும் என்ற நிலை இருக்கிறது.

அதேவேளையில், ஹாங்காங்கில் வாடகை 5% மட்டுமே அதிகரிக்கும் நிலை இருப்பதாக புளூம்பர்க் நிறுவன மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் ஹாங்காங்கில் வீட்டு வாடகை மிக அதிகம். இந்த நிலையை சிங்கப்பூர் வாடகை நிலவரம் நெருங்கிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சைனாடவுன் வீதிக்கடைகளுக்கு வாடகைக் கழிவு ஓராண்டு நீட்டிப்பு

சைனாடவுனில் திரங்கானு ஸ்திரீட், சோகோ ஸ்திரீட், ஸ்மித் ஸ்திரீட், பகோடா ஸ்திரீட் ஆகியவற்றில் நடக்கும் தெருச்சந்தையில் தனியாக ஸ்டால் கடை வைத்து நடத்துவோருக்கு வாடகை நிவாரணம் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக சைனாடவுன் வர்த்தகச் சங்கம் நேற்று தெரிவித்தது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை இத்தகைய கடைகளுக்கு 40% வாடகைக் கழிவு கொடுக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மீண்டும் முழுவீச்சில் இடம்பெறும்

ஓசிபிசி சைக்கிளோட்டம்

சிங்கப்பூரின் ஆகப்பெரிய சைக்கிளோட்டமான 'ஓசிபிசி சைக்கிளோட்டம்' இந்த ஆண்டில் முழுவீச்சில் நடக்க இருக்கிறது. கொவிட்-19 காரணமாக, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு வரும் மே மாதம் 6-7 தேதிகளில் பழையபடி எல்லா வகைப் பிரிவு போட்டிகளோடும் இந்த நிகழ்ச்சி மக்களின் நேரடி ஈடுபாட்டுடன் நடக்க உள்ளது.

இந்த ஆண்டில் 7,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் இரண்டு பிரிவு போட்டிகள்தான் நடத்தப்பட்டன. மற்றவை மெய்நிகர் ரீதியாக நடந்தன.

ஓசிபிசி சைக்கிளோட்டத்திற்கான பதிவு ஆர்ச்சர்ட் கேட்வேயில் நேற்று நடந்தது. 40 கி.மீ. ஓட்டத்தில் அல்லது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 20 கி.மீ. நகர் ஓட்டத்தில் பதிந்துகொண்டோருக்கு அதிநவீன சாம்சங் சாதனங்கள், பந்தய சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் கிடைத்தன.

நாட்டமுள்ளவர்கள் இணையம் வழி பதியலாம். மார்ச் 7ஆம் தேதி வரை பதிவோருக்குக் கட்டணச் சலுகை இருக்கும். மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை பதிவோர் வழக்கமான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.