நண்பரைப்போல் தொலைபேசியில் அழைத்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் போக்கு சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 207 விழுக்காடு அதிகரித்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.
வருடாந்தர மோசடிகள், இணையக் குற்றங்கள் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் நேற்று இவ்வாறு கூறப்பட்டது.
சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு இத்தகைய குற்றம் ஏதும் பதிவாகவில்லை.
இருப்பினும் 2021ல் 686 புகார்கள் இதன் தொடர்பில் பெறப்பட்டன என்றும் 2022ல் அந்த எண்ணிக்கை 2,106 ஆனது என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய $8.8 மில்லியனை இழந்தனர். சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஆக அதிகமாக இடம்பெற்ற மோசடிகளில் இது ஐந்தாவது இடம் வகிக்கிறது.
மோசடிக்காரர் முதலில் அறிமுகமற்ற எண்ணிலிருந்து அழைப்பார். பாதிக்கப்பட்டவரின் நண்பரைப்போல நடிப்பார்.
"நான் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா?", "என்னை நினைவில்லையா?" போன்ற கேள்விகளைக் கேட்பார். பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு நண்பர் பெயராகச் சொல்லும்போது அவற்றில் ஏதாவதொரு பெயரைச் சொல்லித் தான் அந்த நண்பர் என்று மோசடிக்காரர் பொய்யுரைப்பார்.
பின்னர் தனது தொலைபேசி தொலைந்துவிட்டதாகக் கூறி பணம் மாற்றிவிடும்படிக் கேட்பார். இவ்வாறு ஏமாந்தவர்களில் ஏறக்குறைய 46 விழுக்காட்டினர் 30 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
நண்பருக்கு உதவும் நல்லெண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மோசடிக்காரர்கள் தொடர்ந்து தங்கள் உத்திகளை மாற்றிக்கொண்டே உள்ளனர். எனவே இதுகுறித்த அறிதலுடன் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

