கிச்சனர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்றுக் காலை தீ மூண்டது.
புளோக் 2ன் 13வது மாடி வீட்டில் மூண்ட தீயினால் பாதிக்கப்பட்ட எழுவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்,
நேற்று முற்பகல் 11 மணியளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின்கீழ் கூடி இருந்ததைக் காண முடிந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
திருவாட்டி ஹபி அமானின் 84 வயதுத் தாயார், தீ மூண்ட தளத்தில் வசிக்கிறார். தீ மூண்டது தனது தாயாரின் வீட்டிலோ என்ற அச்சத்துடன் 12 மாடிகளை விரைந்து ஏறியதாகக் கூறினார் 61 வயதாகும் அவர்.
காவல்துறையினர், குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியதாகவும் தனது தாயார் கீழே இறங்க உதவியதாகவும் திருவாட்டி ஹபி கூறினார்.
மற்றொரு குடியிருப்பாளரான 58 வயது நூர்ஜஹான், பக்கத்து வீட்டினர் தீ பற்றிக் கூறியதும் தனது நான்கு வயதுப் பேரன், மகள் இருவருடன் விரைந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டார். தீயைக் காண அச்சமாக இருந்ததாகவும் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மூன்று, நான்குமுறை பலத்த சத்தம் கேட்டதாகக் கூறிய 64 வயது ஃபரூக் சம்சுதீன், "வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். கடுமையான வாடை வீசியது," என்றார்.
ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா, குடியிருப்பாளர்களைச் சந்திக்கச் சென்றார்.
அவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள், சிற்றுண்டிகள் ஆகியவற்றையும் அவர் விநியோகித்தார். நேற்றுப் பிற்பகல் 12.30 மணியளவில், தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார். குடியிருப்பாளர்கள் ஓய்வெடுக்க ஜாலான் புசார் சமூக மன்ற அரங்கம் திறந்துவிடப்பட்டு, மதிய உணவும் வழங்கப்பட்டது.

