வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் கட்டுப்படியாகும் தன்மை குறித்த மக்களின் கவலைகளுக்கு ஆளும் மக்கள் செயல் கட்சி போதிய அளவு முக்கியத்துவம் தரவில்லை என்று பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பொது வீடமைப்புக் கொள்கையில் திருத்தம் கொண்டுவர அவர் பரிந்துரைத்தார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் இருவரும் முன்வைத்த பரிந்துரைகள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது திரு சிங் இவ்வாறு கூறினார்.
ஆளுங்கட்சியின் பரிந்துரைமீது வாக்களித்தால், 'பிடிஓ' எனப்படும் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு நாலைந்து ஆண்டுகள் காத்திருப்பது குறித்து சிங்கப்பூரர்கள் திருப்தி அடைவதாகப் பொருள்படும் என்றார் திரு சிங். வீட்டு விலை குறித்தும் சிங்கப்பூரர்களுக்கு கவலை ஏதுமில்லை என்று பொருள்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் லீ, அரசாங்கம் தனது வீடமைப்புக் கொள்கை ஆகச் சிறந்தது என்று ஒருபோதும் கூறவில்லை என்றும் சில அம்சங்களை மேம்படுத்த இயலும் என்று கருதுவதால் அதுகுறித்துத் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

