ரச்சனா வேலாயுதம்
வேலை முடிந்து குளிக்கச் சென்றபோது 39 வயது வெளிநாட்டு ஊழியர் ராமநாதன் சீனிவாசன் (படம்) நேற்று முன்தினம் தங்குவிடுதியில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் மூளையில் ரத்தக்கசிவும் அதனால் பக்கவாதமும் ஏற்பட்டு இரவு 8.35 மணிக்கு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
'ஹீடெக் ஜிடோங்' தனியார் நிறுவனத்தில் கப்பல் கட்டுமானத் துறையில் சீனிவாசன் வேலை செய்தார்.
வேலையிடத்தில் அவர் உயிரிழக்கவில்லை என்பதால் குடும்பத்திற்கு இழப்பீடு தரப்படாது. எனினும், நல்லெண்ண அடிப்படையில் ஒரு தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், செம்மனாம்பொட்டல் எனும் ஊரைச் சேர்ந்த திரு சீனிவாசன், கடந்த ஏழு மாதங்களாக சிங்கப்பூரில் வேலை செய்துவந்தார்.
"இன்னும் இரண்டு மாதங்களில் அவருக்குத் திருமணமாகவிருந்த நிலையில், இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று அவரது அண்ணன் வாசுதேவன் கண்ணீர்விட்டார்.
திரு சீனிவாசனின் நல்லுடல் இன்று இரவு திருச்சிக்குக் கொண்டுசெல்லப்படும்.
திரு ராய் சோபன் என்பவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ, தம் நண்பர்களோடு சேர்ந்து கிட்டத்தட்ட $2,500 திரட்டி வாசுதேவனிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

