ஜனவரி 23ஆம் தேதி அன்று 58,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளை (வேப்) சிங்கப்பூருக்குள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
துவாஸ் துறைமுகத்தில் உள் வரும் சரக்குக் கொள்கலனுக்குள் இது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்தது.
ஆனால் பலவகையான சரக்குகள் அடங்கிய அந்த கொள்கலனின் 'ஸ்கேன்' படங்களைக் கண்டபோது, ஏதோ தவறு இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் அவர்கள் பொருள்களைப் பிரித்துச் சோதனையிட்டனர்.
கொள்கலனில் இருந்த 19,592 பெட்டிகளை வெட்டித் திறந்தபோது மொத்தம் 58,776 'வேப் ரீஃபில்' புட்டிகள் சுகாதார அறிவியல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டன. விசாரணை நடத்தப்படுகிறது. 2021 அக்டோபரில் 2021ல் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 60,000 மின்சிகரெட் பொருட்கள் அளவுக்கு, மிகப்பெரிய அளவு இது.
சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மின்சிகரெட் பயன்படுத்தியதற்காகவும் வைத்திருந்ததற்காகவும் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 2020ஐ விட மும்மடங்காக அதிகரித்துள்ளது. 2022ல், 4,916 பேர் பிடிபட்டனர். 2020ல் 1,266 பேரும் 2021ல் 4,697 பேரும் பிடிபட்டனர்.
கடந்த 2018 முதல் 2022 வரை, மின்சிகரெட் விற்பனை, கடத்தல் குற்றங்களுக்காக 860 பேர் பிடிபட்டனர். அதே காலகட்டத்தில் 145 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மின்சிகரெட் பொருள்களைப் பயன்படுத்துதல், வைத்திருத்தல் குற்றங்களுக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

