கொவிட்-19: தடுப்பூசியைத் தொடர்ந்து இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசியைத் தொடர்ந்து இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். ஆனால், கிருமி தொற்றி உள்ளதா என்பதைப் பரிசோதித்து தெரிந்துகொள்ளவும் கிருமி தொற்றியிருந்தால் சிகிச்சை பெறவும் இனி முழு மானியம் கிடைக்காது.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வேலை அனுமதிதாரர்கள், சிலவகை குறுகியகால அனுமதிதாரர்கள் ஆகிய அனைவரும் தொடர்ந்து இலவசமாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இருந்தாலும் அந்தத் தொற்றுக்கும் அதன் பின் விளைவுகளுக்கும் மருத்துவமனைகளில் அல்லது கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை தேவைப்படுவோர், ஏப்ரல் முதல் 100 விழுக்காடு மானியத்தைப் பெற இயலாது.
இதற்கும் அவர்களின் தடுப்பூசி நிலவரத்திற்கும் தொடர்பு இருக்காது என்று அறிக்கை தெரிவித்தது.
இதற்குப் பதிலாக வழக்கமான சுகாதாரப் பராமரிப்பு மானியத் திட்டங்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது அரசாங்க மானியங்கள், மெடிஷீல்டு லைஃப், மெடிசேவ் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறைந்த வருமான சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குச் சுகாதாரப் பராமரிப்புச் செலவு தொடர்ந்து கட்டுப்படியாகக் கூடியதாகவே இருக்கும்.
இதை உறுதிசெய்ய நிதி உதவித் திட்டம் அவர்களுக்குக் கைகொடுக்கும் என்று அமைச்சு உறுதிபட தெரிவித்தது.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
அதில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இது பற்றி விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூர்வாசிகளுக்கு இதுவரை கொவிட்-19 பரிசோதனையும் சிகிச்சையும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைத்து இருப்பதை அவர் சுட்டினார்.
இதைப் பொறுத்தவரை 100 விழுக்காடு மானியத்தை இனிமேலும் தொடர இயலாது என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றியிருப்போரை தனி நிலையங்களில் தனிமைப்படுத்த வேண்டிய தேவை இனி இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.
இருந்தாலும்கூட சில நிலையங்கள் இன்னமும் செயல்படும். தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புவோர் அங்கு தங்கலாம். அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.
நலமிக்க எஸ்ஜி செயல்திட்டத்தின்கீழ் தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் அத்தனை தடுப்பூசிகளையும் இலவசமாக மக்களுக்கு வழங்குவது பற்றி அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார்.

