செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ca1fcbb4-f897-4e96-b96c-ed6b09dda5f9
-

வீவக மறுவிற்பனை வீட்டு விலை ஜனவரியில் 1.4% கூடியது

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து 31வது மாதமாக கடந்த ஜனவரியில் கூடியது. கைமாறிய வீடுகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

டிசம்பரில் 0.2% அதிகரித்து இருந்த வீவக மறுவிற்பனை வீட்டு விலை, ஜனவரியில் 1.4% கூடியதாக 99.co, எஸ்ஆர்எக்ஸ் நிலச்சொத்து இணையவாசல்கள் மூலம் தெரிகிறது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் விலை 8.7% கூடியது.

அதேபோல், ஜனவரியில் 2,575 வீடுகள் கைமாறியதாக கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை டிசம்பரில் 2,242 ஆக இருந்தது.

சென்ற ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் கைமாறிய வீடுகள் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரியில் 5.4% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கைமாறிய வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் கூடி இருக்கிறது.

சந்தை வேகத்தை மட்டுப்படுத்த நடப்புக்கு வந்த நடவடிக்கைகளில் இருந்து மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை மீட்சி கண்டு வருவதையே இது காட்டுவதாக சொத்துத்தறை பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

2022ல் $22.5 பி. முதலீடு வருகை; இந்த ஆண்டில் குறைய வாய்ப்பு

சிங்கப்பூர், சென்ற ஆண்டில் $22.5 பில்லியன் நிலைச் சொத்து முதலீடுகளைக் கவர்ந்துள்ளது. என்றாலும் இந்த ஆண்டில் இந்த அளவு குறையும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது.

சிங்கப்பூர் சென்ற ஆண்டில் சாதனை அளவில் முதலீடுகளைக் கவர்ந்ததற்கு மின்னணுத் துறையே முக்கிய காரணமாக இருந்தது.

அதுவும் சென்ற ஆண்டின் முதல் பாதியில் மின்னணுத் துறையில் இடம்பெற்ற பெரும் பெரும் உற்பத்தித்துறை திட்டங்களில் சாதனை அளவுக்கு முதலீடுகள் வந்தன.

ஆனால் இந்த ஆண்டு நிலவரங்கள் மாறுபட்டு இருக்கின்றன. உலக அளவில் பொருளியல் நிலவரங்கள் நிச்சயமில்லாமலேயே தொடர்கின்றன.

முதலீடுகளைப் பெற போட்டி அதிகமாகிவிட்டது. கணினிச் சில்லுகளுக்குத் தேவை குறைந்துள்ளது.

ஆகையால் சென்ற ஆண்டு அளவுக்கு இந்த ஆண்டில் முதலீடுகளை எதிர்பார்க்க இயலாது என்று பொருளியல் வளர்ச்சிச் கழகம் கணித்துள்ளது.

சென்ற ஆண்டில் முதலீடு செய்யப்போவதாக உறுதி தெரிவிக்கப்பட்ட மொத்த நிலைச்சொத்து முதலீடுகளில் மூன்றில் இரண்டு பகுதி மின்னணுத் துறையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுப் பன்றி உடலில்

காய்ச்சல் கிருமி

சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதியில் காணப்பட்ட காட்டுப் பன்றி உடலில், ஆப்ரிக்கன் ஸ்வைன் காய்ச்சல் கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

அந்தக் கிருமி மனிதர்களுக்குப் பரவாது. ஆகையால் பொதுநலனுக்குப் பாதிப்பு இல்லை என்று கழகம் தெரிவித்தது. சிங்கப்பூரில், காட்டுப் பகுதிகள், பூங்காக்கள், தாவரங்கள் மண்டி வளர்ந்து இருக்கும் இடங்களில் இத்தகைய பன்றிகளைக் காணலாம்.

இவற்றின் உடல் நலனை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேசிய பூங்காக் கழகம் அறிக்கையில் தெரிவித்தது.