சிங்கப்பூரில் நடப்பில் இருக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் அனைத்தும் பிப்ரவரி 13 முதல் அகலுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பதை மெய்ப்பிக்க இங்கு வருவதற்கு முன்னதாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனையும் இனி தேவை இருக்காது.
இங்கு வருவதற்கு முன் தடுப்பூசி சான்றிதழைக் காட்ட வேண்டிய தேவையும் இனி இருக்காது. இதன்மூலம் சிங்கப்பூர் நடப்பில் இருந்த அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகற்றிவிடும்.
முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் குறுகிய கால பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு வருவோர், பயணக் காப்புறுதி வாங்க வேண்டிய தேவையும் இனி இருக்காது என்று சுகாதார அமைச்சு நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
இருந்தாலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் இவை மீண்டும் நடப்புக்கு வரும் என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இது பற்றி பல விவரங்களைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் அதற்கு முன்னதாக தாங்கள் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் நிலவரங்களை நன்கு சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளைத் தொடர்ந்து பரிசோதிப்பார்கள். அவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல், மத்திய கிழக்கு சுவாசப் பிரச்சினைகள், இபோலா தொற்று போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய இந்தச் சோதனை நடத்தப்படும்.
விமானம், கடல் வழியாக சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தரை வழி வரும் குறுகியகால வருகையாளர்கள் எல்லாருமே தொடர்ந்து எஸ்ஜி வருகை அட்டையைப் பூர்த்தி செய்து உடல்நல அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.

