குழாய் பொருத்துவோர், மின்சார வேலைகளைச் செய்வோர் போன்ற தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப வேலைகளில் இளையர்களைச் சேர்க்கும் நோக்கத்தில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) புதிய ஓர் ஏற்பாட்டை முன்வைத்து இருக்கிறது.
அந்த ஏற்பாட்டின் மூலம் இத்தகைய ஊழியர்கள் பதவி உயர்வு பெற தெள்ளத்தெளிவான வழிமுறை இருக்கும். 'முன்மாதிரி வாழ்க்கைத் தொழில் மேம்பாடு' என்று அந்தப் புதிய ஏற்பாடு குறிப்பிடப்படுகிறது.
தேர்ச்சியுள்ள, மிக முக்கியமான இத்தகைய தொழில்நுட்பர்களின் சம்பளத்தை உயர்த்தவும் வேலை உயர்வைச் சாத்தியமாக்கவும் அந்தப் புதிய ஏற்பாடு முயலும் என்று என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நேற்று தெரிவித்தார்.
படிப்படியாக உயரும் சம்பளம் முறை 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக குறை சம்பள சிங்கப்பூர் ஊழியர்கள் பெரிதும் பலன் அடைந்துள்ளனர்.
துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள் போன்ற இத்தகைய ஊழியர்கள் தங்களுடைய உற்பத்தித் திறனையும் தேர்ச்சிகளையும் மேம்படுத்திக்கொண்டு அதன்மூலம் இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
அதுபோலவே, என்டியுசியின் புதிய ஏற்பாடு நடப்புக்கு வரும்போது தேர்ச்சியுள்ள வேலைகளை உள்ளடக்கும் தொழில்துறையைச் சேர்ந்த ஊழியர்கள், குறிப்பிட்ட தேர்ச்சி, பயிற்சிகள் மூலம் நன்மையடைந்து பதவி உயர்வையும் சம்பள உயர்வையும் பெறுவார்கள்.
உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு தொழில்நுட்பர்களாக ஆவதற்கும் இப்புதிய ஏற்பாடு வகைசெய்யும்.
இந்த ஏற்பாட்டில் குழாய் வேலை செய்பவர்கள், மின்சார வேலை பார்ப்பவர்கள், குளிரூட்டி, இயந்திரக் காற்றோட்ட சாதனங்களைச் சரிசெய்பவர்கள் போன்ற மூன்று முக்கிய துறைகளில் இளையர்களை உருவாக்க முதலில் இந்தப் புதிய ஏற்பாடு முயற்சி செய்யும். இதுவே இதன் முன்னுரிமையாக இருக்கும்.
இந்த மூன்று வகை தொழில்நுட்பர்களும் சிங்கப்பூரின் அன்றாட வாழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தொழில்நுட்பர்களும் உலோக, இயந்திர ஊழியர்கள், கட்டுமானத் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உள்ளிட்ட இதர தொழில்நுட்பர்களுமாக மொத்தம் 50,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இத்தகைய அத்தியாவசிய வேலைகளைப் பார்த்து வருகிறார்கள்.
இருந்தாலும் இத்தகைய ஊழியர்களுக்கு வயது கூடி வருகிறது. இதேநிலை நீடித்தால் இந்த வேலைகளைப் பார்க்க போதிய அளவுக்கு ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். இவர்களின் சராசரி சம்பளம் சென்ற ஆண்டில் $2,600 ஆக இருந்தது. இது ஏறக்குறைய குறைந்த வருவாயை ஈட்டும் ஊழியர்களின் ஊதிய அளவை ஒத்து இருக்கிறது என்றும் திரு இங் சுட்டினார்.
இதனால்தான் இந்த வேலைகளுக்கு இளையர்களை கவர்ந்து இழுத்து அவர்களின் ஊதியமும் வாழ்க்கைத் தொழிலும் உயர புதிய ஏற்பாடு உத்தேசிக்கப்பட்டு வருவதாக திரு இங் கூறினார்.

