சிங்கப்பூர்வாசிகளின் சராசரி குடும்ப வருமானம் 2022ஆம் ஆண்டில் கூடியிருக்கிறது.
இதையடுத்து வருமான இடைவெளி குறைந்துள்ளது என்று சிங்கப்பூர் புள்ளியியல் துறை நேற்று வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
வீட்டில் வேலை பார்க்கும் சிங்கப்பூர்வாசிகளின் வேலையிலிருந்து கிடைத்த வருமானம் வழக்கமான அடிப்படையில் 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் பார்த்தால் குடும்ப வருமானம் 2021ல் 9,520 வெள்ளியிலிருந்து 2022ல் 10,099 வெள்ளிக்குக் கூடியிருக்கிறது.
முதலாளிகளின் மத்திய சேமநிதி பங்களிப்பை சேர்த்து பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டால் 2022ல் சராசரி குடும்ப வருமானம் 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2017 முதல் 2022 வரை கணக்கிட்டால் சிங்கப்பூர்வாசிகளின் குடும்ப வருமானம் வருடாந்திர அடிப்படையில் 0.6 விழுக்காடு கூடியிருக்கிறது.
இத்தகைய குடும்பங்களில் குறைந்தது ஒருவர் வேலை பார்த்தவராக இருந்தார்.
குடும்ப அளவைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் வேலையில் இருந்து கிடைத்த ஒருவரின் சராசரி மாத வருமானம் 2021ல் $3,027லிருந்து 2022ல் $3,287க்குக் கூடியது.
இது, இதர அம்சங்களை சேர்க்காமல் 8.6 விழுக்காடு உயர்வாகும். அதே சமயத்தில் பணவீக்கத்தையும் உள்ளடக்கினால் அது 2.6 விழுக்காடு உயர்வாகும்
2017 முதல் 2022 வரையில் குடும்பத்தில் ஒரு உறுப்பினரின் சராசரி குடும்ப வருமானம் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 11.9 விழுக்காடு கூடியது.
2022ல் வருமானம் ஈட்டும் அனைத்துக் குடும்பங்களில் வேலை பார்த்தகுடும்ப உறுப்பினர் மூலம் கிடைத்த சராசரி குடும்ப வருமானமும் 5.3 விழுக்காட்டில் இருந்து 15.6 விழுக்காடு வரை அதிகரித்தது என்று புள்ளியியல் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

