தெங்கா, பொங்கோல் போன்ற புதிய குடியிருப்புப் பேட்டைகளில் அதிகரிக்கும் பள்ளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய பள்ளிகள் கட்டப்படும் அல்லது மற்ற இடங்களில் உள்ள பள்ளிகள் இப்பகுதிக்கு மாற்றப்படும்.
ஏற்கெனவே பயனியர் தொடக்கப்பள்ளி 2026ல் தெங்காவுக்கு மாற்றப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இது, தெங்காவில் இடம் பெறும் முதல் தொடக்கப்பள்ளியாகும்.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் மேற்கு, வடகிழக்கு வட்டாரங் களுக்கு மேலும் நான்கு பள்ளிகள் இடம் மாற்றப்படும் அல்லது புதிதாகக் கட்டப்படும் என்று கல்வி அமைச்சு நேற்று கூறியது.
இதேபோல 'ஸ்பெட்' எனப்படும் சிறப்புத் தேவையுடைய இரண்டு பள்ளிகளும் இங்கு இடம் மாற்றப்படும் அல்லது புதிதாகத் திறக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
மேலும் செங்காங்கில் 2026ஆம் ஆண்டில் புதிய உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதையடுத்து புக்கிட் பாத்தோக் ஈஸ்ட்டில் உள்ள புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி 2027ல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டுக்கு இடம் மாறுகிறது.
2028ஆம் ஆண்டுவாக்கில் தெங்காவில் புதிய தொடக்கப்பள்ளி தொடங்கப்படும் என்றும் 2030ஆம் ஆண்டில் ஆங்கிலோ சீனப் பள்ளி (ஏசிஎஸ்- தொடக்கப்பள்ளி) நியூட்டனில் உள்ள பார்க்கர் சாலையிலிருந்து புதிய தொடக்கநிலை 1 மாணவர் களைக் கொண்டு தெங்காவில் செயல்படத் தொடங்கும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
அதே ஆண்டில் முதல் முறையாக பெண்களும் அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட விருக்கின்றனர்.
இது ஒரு முக்கிய மாற்றம் என்று குறிப்பிட்ட கல்வி அமைச்சு, ஆங்கிலோ சீனப் பள்ளியுடன் 2022ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தது.
'ஏஎஸ்டி' எனக் குறிப்பிடப்படும் மதியிறுக்கம் கொண்ட மாணவர்களுக்கான பள்ளிகளுக்கும் தேவை அதிகரித்து வருகிறது.
இதனால் சிறப்புத் தேவை யுடைய மாணவர்களுக்கான ஏற்பாடுகள் பற்றி கல்வி அமைச்சு நேற்று விளக்கியது.
வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து சுவா சூ காங்கில் உள்ள முந்தைய சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக இடத்தில் மதியிறுக்கம்கொண்ட மாணவர்களுக்கான 5வது பள்ளி செயல்படத் தொடங்கும்.
இப்பள்ளியை ஏசிஎஸ்ஸுடன் சேர்ந்து மெத்தடிஸ்ட வெல்ஃபேர் சர்விசஸ் நடத்தும்.
2031ல் இப்பள்ளி பின்னர் தெங்காவில் உள்ள நிரந்தர இடத்துக்கு பின்னர் மாறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.

