2023ல் ஹஜ் புனித யாத்திரைக்குத் திட்டமிடும் முஸ்லிம்கள் இம்முறை சராசரியாக $1,500 அல்லது அதற்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும்.
ஜூனில் மேற்கொள்ளப்படும் ஹஜ் 2023க்கான குறைந்தபட்ச பயணத் திட்டத்துக்கான கட்டணம் ஒரு நபருக்கு $8,490ஆக இருக்கும். வழக்கமான பயணத் திட்டத்துக்கான சராசரிக் கட்டணம் நபருக்கு $14,150ஆக இருக்கும்.
இதில் அவசர மருத்துவ உதவி, விமானக் கட்டணம் சேர்க்கப்படவில்லை.
ஹஜ் பயணத்துக்கு வாய்ப்புப்பெற்றவர்கள் முயிஸ் அங்கீ கரித்த 13 பயண முகவர்களிடம் பதிந்துகொள்ளலாம்.
மொத்தம் 30 ஹஜ் பயணத் திட்டங்கள் வழங்கப்படவிருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட பயணத் திட்டங்கள் தங்களுடையத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் கட்டுபடியாகக்கூடிய விலையில் இருப்பதையும் கவனமாகப் பரிசீலித்து உறுதி செய்து கொள்ளும்படி 'முயிஸ்' எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டது.
ஹஜ் பயணத்திட்ட ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களைப் படித்து, புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.
பயண முகவர்களும் பயணத் திட்டங்களை தெளிவாக விளக்கிக் கூற வேண்டும் என்றும் முயிஸ் வலியுறுத்தியுள்ளது.
புனித யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்புக் குறித்த தகவல் 900 பேருக்கு குறுந்தகவல் அல்லது மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

