வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலை, தீவு விரைவுச் சாலை மற்றும் பூன் லேயில் உள்ள ஜாலான் புரோ ஆகியவற்றின் ஒரு பகுதி பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தச் சோதனை மூலம் பசுமைச் சாலை மேற்பரப்புக்கான சாத்தியமான பொருள் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இரைச்சலைக் குறைப்பது, வெப்பத்தைத் தாங்குவது, சாலையின் கடினத்தன்மை போன்ற அம்சங்கள் 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை மேற்கொள்ளப்படும் பல்வேறு சோதனைகளில் நிர்ணயிக்கப்படும்.
இது குறித்து தமது கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த போக்குவரத்து மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் பல பொருள்கள் கலந்து இருக்கும் என்றார்.
நீடித்த நிலைத்தன்மைமிக்க போக்குவரத்துக்கு இத்தகைய பசுமை முயற்சிகளை மேற் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புதிய சாலைகள் பற்றி விளக்கமளித்துள்ள நிலப் போக்குவரத்து ஆணையம், பிளாஸ்டிக் கழிவு கலந்துள்ள 'ஆஸ்பால்ட்' கலவையைப் பரிசோதித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஜாலான் புரோ சோதனையில் உடனடியாகக் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கனரக வானங்களுக்கு புதிய சாலைகள் ஏற்றவையா என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.
ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, உள்ளூர் கட்டுமான நிறுவனமான சேம்வோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.
இதற்கிடையே வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலை, தீவு விரைவுச் சாலை சோதனையில் ஆஸ்பால்ட் கலந்த பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கப்பூர் தேசிய பல்லைக் கழகத்துடன் சேர்ந்து இந்தக் கலவையை நிலப் போக்குவரத்து ஆணையம் தயாரித்து இருக் கிறது.

