பணப்பையில் அல்லது கையில் எடுத்துச் செல்லத்தக்க நீண்டகால அனுமதி அட்டைகள், இம்மாதம் 27ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்படமாட்டா என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று அறிவித்தது.
நீண்டகால வருகையாளர்கள், மாணவர்கள், கணவன் அல்லது மனைவியைச் சார்ந்திருப்போர் ஆகியோருக்கு இனிமேல் மின்னிலக்க வடிவில்தான் அனுமதி ஆவணம் வழங்கப்படும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டது.
சார்ந்திருப்போர் அனுமதியை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வழங்குகிறது.
பிப்ரவரி 27ஆம் தேதிக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அனுமதி அட்டைகள், அவை காலாவதியாகும் வரை அல்லது தள்ளுபடி செய்யப்படும் வரை தொடர்ந்து செல்லுபடியாகும்.
நீண்டகால அனுமதிதாரர்கள் தங்கள் மின்னிலக்க அனுமதி ஆவணத்தை இந்த ஆணையத்தின் இணையத்தளத்தில் (ica.gov.sg), MyICA e-Service என்ற சேவையில், MyICA என்ற கைப்பேசி செயலி வழி பெறலாம். அல்லது ஆவணப் பதிவு இணையத் தளமான FileSG என்ற தளத்திலும் பெறலாம்.
சிங்பாஸ் கணக்கு உள்ளவர்கள் அந்தச் செயலியில் தங்கள் நீண்டகால அனுமதியைக் காணலாம்.
அரசாங்க அமைப்புகள், பள்ளிக்கூடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவற்றுக்கு இந்த மாற்றம் குறித்து இந்த ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
நீண்டகால அனுமதி அட்டைகள் மின்னிலக்கமயமாவதால் பலரும் ஆணையத்திற்குச் செல்ல வேண்டிய தேவை குறையும். இந்த அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையம் வழி பரிசீலிக்கப்படும்.
அட்டைகள் தொலைந்துவிடும் அல்லது சேதமாகிவிடும் என்ற பிரச்சினைகளும் இனி இருக்காது.
நீண்டகால அனுமதியை இரண்டு வடிவங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தங்களின் மின்னிலக்க அனுமதியை பார்க்க அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ள உதவி தேவைப்படுவோர் ஆணையத்தின் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அப்படி செய்யத் தவறினால் அவர்கள் இந்த ஆணையத்தின் கட்டடத்தின் நான்காவது மாடிக்குச் சென்று உதவி நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

