சிங்கப்பூரும் அதன் நிறுவனங்களும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்துடன் கூடிய பொருளியல் ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்தும். முதலீடுகளையும் கூட்டும்.
முதலாவது உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சநிலை மாநாடு இம்மாதம் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை உத்தரப் பிரதேசத்தில் நடந்து வருகிறது.
அந்த மாநாட்டில் ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க் ஆகியவற்றுடன் சிங்கப்பூரும் கலந்துகொள்கிறது.
அந்த மாநிலத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் செய்திருக்கும் முதலீடுகளை எடுத்துக்காட்டும் விதமாக அந்த மாநாட்டையொட்டி சிங்கப்பூர் கூடம் திறக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டில் மொத்தம் 21 சிங்கப்பூர் நிறுவனங்களும் 58 தொழில்துறைப் பிரமுகர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் உதவியுடன், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன.
அவற்றின் விளைவாக ஆறு புரிந்துணர்வு குறிப்புகள் கையெழுத்திடப்படுகின்றன.
இதன் மூலம் சிங்கப்பூரின் ஆறு நிறுவனங்கள் அம்மாநிலத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரி வித்தது.
உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, கழிவு நிர்வாக துறையின் ஆற்றல் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பப் பேட்டைகள், கணினித் தகவல், கல்வி ஆகிய துறைகளில் அந்த முதலீடுகள் இடம்பெறும்.
வர்த்தக, தொழில் அமைச்சு உத்தரப் பிரதேச மாநில அரசுடன் புரிந்துணர்வு குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டது.
இதன்படி சிங்கப்பூரும் உத்தரப் பிரதேச மாநில அரசும் பரஸ்பர நலன்களுக்கான பல்வேறு துறைகளில் ஒத்துழைக்கும் என அமைச்சு தெரிவித்தது.

