செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
4baae5f6-a3a4-41e8-b794-756c96de01b3
-

இந்திய பல் மருத்துவரின் புதினத்திற்கு விருது

உள்ளூர் புதினத்திற்கான வருடாந்திர இலக்கிய விருது 'தி கேம்ப்பல் கார்டன்ஸ் லேடிஸ் சுவிம்மிங் கிளாஸ்' என்ற படைப்புக்குக் கிடைத்துள்ளது.

அது, சிங்கப்பூரில் இப்போது வசிக்கும் ருஷாலி ஜுன்னார்க்கர் என்ற இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவரின் முதல் படைப்பாகும்.

சிங்கப்பூர் கூட்டுரிமை புளோக் ஒன்றில் நீச்சல் கற்றுக்கொள்ளும் இந்திய மாதர்களைப் பற்றி அந்தப் புதினம் எழுதப்பட்டு உள்ளது.

அதற்கு 'எபிகிராம் புதினம் பரிசு 2023' விருது கிடைத்துள்ளது. விருதைப் பெற சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புருணை, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளில் இருந்து படைப்புகள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை மதிப்பிட்ட ஐவர் கொண்ட நடுவர் குழு பல் மருத்துவரின் படைப்பைத் தேர்ந்து எடுத்தது. குழுவில் 'எவ்வரித்திங் எவ்வரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்பட புகழ் மைக்கேல் இயோவும் ஒருவர்.

$220,000 ஏமாற்றியதாக வங்கியாளர் மீது குற்றச்சாட்டு

முன்னாள் தனிநபர் வங்கியாளர் ஒருவர், இட்டுக்கட்டப்பட்ட நிதி திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களில் ஒருவரின் $220,000 பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

லோ ஷெங் யாங், 29, என்ற அந்த வங்கியாளர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பபட்டது.

அவர், சென்ற ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையில் ஏழு முறை அந்த ஆடவரை ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

யுஓபி வங்கியில் பணத்தை நிலைவைப்புத் திட்டத்தில் போடப்போவதாகக் கூறி அந்த வாடிக்கையாளரை நம்பச் செய்து கடைசியில் அவரை லோ ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. லோ, மத்திய காவல்துறை பிரிவில் விசாரணைக் காவலில் இருக்கிறார். வழக்கு பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

$762 மில்லியன் இழப்பை எதிர்நோக்கும் நிறுவனம்

சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு செயல்படும் பண்டக வர்த்தக நிறுவனமான 'டிரஃபிகுரா குருப்', தனக்கு

$762 மில்லியன் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளது. தான் வாங்கி இருந்த உலோகச் சரக்குகளில் இருக்க வேண்டிய நிக்கல் பொருள்கள் இல்லை என்பதை அது கண்டறிந்தது.

நிறுவனத்திற்கு எதிராக திட்டம்போட்டு தில்லுமுல்லு நடந்து இருக்கிறது என்றும் அதைக் கண்டுபிடிக்க அந்த நிறுவனத்திற்கு இரண்டு மாத காலம் ஆனது என்றும் நம்பப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. இதை நிறுவனமும் உறுதிப்படுத்தியது.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் பிராடெக் குப்தாவுக்கு எதிராகவும் அவருடன் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கு எதிராகவும் நீதிமன்ற நடவடிக்கையை தான் தொடங்கி இருப்பதாக அறிக்கை ஒன்றில் டிரஃபிகுரா குருப் தெரிவித்தது.

மருத்துவருக்கு எதிரான வழக்கு தோல்வி

மவுண்ட் எலிசபெத் மருத்துவ நிலையத்தில் 'அஸ்தெட்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சென்டர்' என்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிலையத்தை நடத்திவரும் டாக்டர் ஆண்டரு கூ கியான் மிங் என்பவருக்கு எதிராக லீ கோங் கீ, 62, என்பவர் வழக்குத் தொடுத்தார்.

தனக்கு இரண்டு கண்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துகொள்ள தான் அந்த மருத்துவரை நாடியதாக லீ குறிப்பிட்டார். அந்த மருத்துவர் அலட்சியமான முறையில் ஆலோசனை கூறியதாகவும் தனக்கு அரைகுறையாக, முறையின்றி அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும் வழக்கில் லீ கோரினார்.

இதன் காரணமாக மேல் புருவத்தில் எடுப்பாக பெரிய அளவில் தழும்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறிய லீ தனக்கு இழப்பீடு வேண்டும் என்றும் கோரினார்.

ஆனால் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, வாதி தனது கோரிக்கைகளை சாட்சியங்களுடன் மெய்ப்பிக்க வில்லை என்று சொல்லி மருத்துவருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்தார்.