வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 2017 முதல் 2022 நவம்பர் வரை 21 வீவக வீடுகளைக் கைப்பற்றியது. குறைந்தபட்ச குடியிருப்புக் கால விதிமுறைகள் மீறப்பட்டதே அதற்கான காரணம். அந்த வீடுகளில் ஆறு வீடுகள் கழகத்திடம் இருந்து வாங்கப்பட்டவை. 15 வீடுகள் மறுவிற்பனை வீடுகள்.
குறைந்தபட்ச குடியிருப்புக் கால விதியை மீறியதன் தொடர்பில் 53 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக அமலாக்க நட வடிக்கைகள் எடுத்ததாக சென்ற ஆண்டு டிசம்பரில் கழகம் தெரிவித்தது. அந்த நடவடிக்கைகளின் விளைவாக கழகம் 21 வீடுகளைக் கட்டாயமாக திருப்பி எடுத்துக்கொண்டுவிட்டது.
அமலாக்க நடவடிக்கைகளுக்கு இலக்கான 53 உரிமையாளர்களில் 25 பேர் கழகத்திடம் இருந்து நேரடியாக வீடுகளை வாங்கி இருந்தார்கள். 28 பேர் பொதுச் சந்தையில் வீட்டை வாங்கியிருந்தார்கள்.
அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மொத்தம் 21 வீடுகளைக் கழகம் திருப்பி எடுத்துக்கொண்டுவிட்டது. இந்த விவரங்களைக் கழகத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
உரிமையாளர்கள் குடியிருப்பதற்காகவே வீடுகள் கொடுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச குடியிருப்புக் காலத்தின்போது அவர்கள் தங்கள் வீடுகளில் குடியிருந்தாக வேண்டும் என்று கழகம் தெரிவித்தது.
குறைந்தபட்ச குடியிருப்புக் காலத்தின்போது வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை விற்க முடியாது. முழு வீட்டையும் வாடகைக்குவிட முடியாது.
அவர்கள் தனியார் குடியிருப்புச் சொத்துகளில் முதலீடு செய்யவும் முடியாது என்று பேச்சாளர் விளக்கினார்.
கழகத்திடம் இருந்து நேரடியாக வாங்கப்படும் வீடுகளுக்கும் மறுவிற்பனை வீடுகளுக்கும் குறைந்தபட்ச குடியிருப்புக் கால விதி பொருந்தும் என்றார் அவர்.

