மீன் இனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மீன்பிடிக்க மானியம் வழங்கும் நடைமுறைக்கு சிங்கப்பூரில் விரைவில் தடை விதிக்கப்படும்.
உலகப் பெருங்கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாட்டை முறையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் இரண்டாவது உறுப்பு நாடாக சிங்கப்பூர் ஆகி இருக்கிறது.
இதை அடுத்து அந்தத் தடை நடப்புக்கு வருகிறது.
அந்த உடன்பாடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒருமித்த கவனம் செலுத்தும் முதலாவது அனைத்துலக வர்த்தக உடன்பாடாகும்.
அதை முறையாக ஏற்றுக்கொண்டு இருக்கும் முதலாவது கடலோர நாடு சிங்கப்பூர்.
கடலில் மீன் இனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீன்களைப் பிடிப்பதால் உலகில் மீன் வளம் குறைகிறது.
இதைக் கருத்தில் கொண்டு பாதகமான முறைகளில் மீன் களைப் பிடிக்கும் நடைமுறைக்கு மானியம் கிடைப்பதைத் தடை செய்யும் உலக விதிகளை அந்த உடன்பாடு வரையறுப்பதாக ஜெனிவாவில் செயல்படும் உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்து உள்ளது. உடன்பாட்டை சுவிட்சர்லாந்து ஜனவரி 20ஆம் தேதி முறையாக ஏற்றுக்கொண்டது.
உடன்பாடு நடைமுறைக்கு வரவேண்டுமானால் உலக வர்த்தக நிறுவனத்தின் 164 உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தங்கள் இணக்கத்தை நிறுவனத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

