இளையர்கள், தங்கள் சகாக்கள் யாராவது தீவிரவாத மனப்போக்கு ஆபத்தில் சிக்கிவிடக்கூடும் என்பது தெரியவந்தால் அதுபற்றி ஆசிரியர், பெற்றோர், அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
தீவிரவாத, பயங்கரவாத மனப்போக்கு ஆபத்தைத் தவிர்ப்பதில் இளையருக்கு இத்தகைய மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் சுய தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக் கொள்ளும் இளையர்கள் முன்னிலும் அதிகமாக இருப்பது கவலை தருவதாகவும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும் சிங்கப்பூர் மலாய் இளையர் நூலகச் சங்கத் (தாமான் பச்சாஆன்) தலைவர் அப்துல் ஹலிம் காதர் கூறினார்.
மேலும் அதிகமான இளையர்கள், மாணவர்கள், தீவிரவாத சித்தாந்தத்தில் ஈடுபடும் போக்கு தொடர்ந்தால் நமக்குப் பிரச்சினைதான் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இளையர்கள் தங்கள் சகாக்கள் மீது கண்வைத்து வரவேண்டும். சிங்கப்பூர் பாதுகாப்பான நாடாக இருப்பதை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
'தீவிரவாதத்தைத் தடுப்பதில், சமூகப் பிணைப்பைப் பலப்படுத்துவதில் இளையரின் பங்கு' என்ற தலைப்பில் தாமான் பச்சாஆன் ஏற்பாட்டில் நேற்று ஆய்வரங்கு நடந்தது.
அனைத்துப் பின்நலச் சேவைக் குழுமம், சமய மறுவாழ்வுக் குழுமம் ஆகியவற்றுடன் சேர்ந்து அந்த ஆய்வரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் அல்சகோஃப் அல்-அரேபியா மதரசாவைச் சேர்ந்த 30 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடையே அப்துல் ஹலிம் பேசினார். ஆய்வரங்கிற்கு உறுதுணையாக இருந்த அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.