மின் சிகரெட்டு வியாபாரிகள் மாணவர்கள் மீது குறிவைக்கிறார்கள். சமூக ஊடகங்களிலும் டெலிகிராம் போன்ற செய்திச் செயலிகளிலும் வலைவீசி அவர்கள் தந்திரமாக மாணவர்களைக் கவர்கிறார்கள்.
கவர்ச்சிகரமான நிறங்களில் மின்சிகரெட்டுகளையும் ஆவியாக்கி கருவிகளையும் அவர்கள் விற்பதாகத் தெரிகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அத்தகைய சில கருவிகள் பேனாவைப் போன்ற தோற்றத்தில் சட்டென்று கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளன. சிறார் உள்ளிட்ட பல தரப்பினரையும் கவர வேண்டும் என்பதற்காக வெவ்வேறான சுவைகளுடன் கூடிய ரசாயனப் பொருள்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
பள்ளிக்குச் செல்லும் சிறார்களில் சிலர், தாங்கள் ஆவியாக்கி சாதனங்களைப் பயன்படுத்துவதைப்போல காணொளிப் படங்களை இணையத்தில் பதிவேற்றுகிறார்கள்.
அப்படிச் செய்து காட்டும்படி தங்கள் சகாக்களுக்கு அவர்கள் சவால்கூட விடுகிறார்கள்.
மாணவர்களிடையே மின்சிகரெட், ரசாயன ஆவி பயன்பாடு அதிகரிப்பது தங்களுக்குக் கவலை அளிப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே, சென்ற ஆண்டு அக்டோபர் முதல் மூன்று மாத காலத்தில் மாதம் ஒன்றுக்குச் சராசரியாக சுமார் 200 விவகாரங்களைத் தன்னுடைய பயிலகம் கையாண்டு இருப்பதாக உயர்கல்வி நிலையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் ராபர்ட் என்பவர் கூறினார்.
பயிலக வளாகத்தில் அல்லது பள்ளிக் கட்டடத்திற்கு அப்பால் ரசாயன ஆவியைப் பிடித்து கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள்.
கொவிட்-19 காலத்தில் 2020ல் ரசாயன ஆவி புழக்கம் அதிகரித்ததாக ராபர்ட் கூறுகிறார்.மாணவர்களிடம் இது ஒரு புதிய பாணியாக ஆகி இருக்கிறது என்று அந்தப் பயிலகத்தில் கட்டொழுங்கு ஆசிரியராகப் பணியாற்றும் ராபர்ட் தெரிவித்தார்.
மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவியாக்கிச் சாதனங்களின் படங்களையும் அவர் காட்டினார். அவற்றில் சில கருவிகள் பேனாவைபோல, சிறிய போத்தல்களைப் போல இருந்தன.
சிகரெட்டைவிட ரசாயன ஆவி பிடிப்பதில் ஆபத்து குறைவு என்று பிடிபட்ட மாணவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளில் புகைபிடித்த, ரசாயன ஆவி பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்றாண்டு காலத்தில் 1,000 மாணவர்களுக்கு சுமார் ஏழு பேர் என்ற சராசரி அளவிலேயே தொடர்ந்து இருந்து வந்ததாக கல்வி அமைச்சு கூறியது.

