வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் எஞ்சியுள்ள குத்தகைகாலத்தை கழகமே மீண்டும் வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் 2022 டிசம்ப;ர் நிலவரப்படி ஏறத்தாழ 9,700 குடும்பங்கள் சேர்ந்துள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு குடும்பங்கள், மீதமுள்ள குத்தகை காலத்தின் ஒரு பகுதியை வீவகவிடம் விற்று, $100,000 முதல் $200,000 வரை பெற்றுள்ளன.
வீவக அப்புள்ளிவிவரங்களை நேற்று தெரிவித்தது. குத்தகையின் ஒரு பகுதியை விற்ற குடும்பங்களில் 55 விழுக்காடு, மூவறை அல்லது அதைவிட சிறிய வீடுகளில் வசித்து வருகின்றன. 31 விழுக்காட்டுக் குடும்பங்கள் நாலறை வீடுகளிலும் 13 விழுக்காடு ஐந்தறை அல்லது அவற்றைவிட பெரிய வீடுகளிலும் வசித்து வருகின்றன.
கடந்த 2020லிருந்து, ஒவ்வோர் ஆண்டும் அத்திட்டத்தில் சேரும் குடும்பங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,500 என நிலையாக உள்ளதென்று கழகம் கூறியது.
வீட்டுக் குத்தகையை திரும்ப வாங்கிக் கொள்ளும் திட்டம் 2009ல் தொடங்கப்பட்டது.
அதில் 65 வயது அல்லது அதற்கும் அதிகமான வயதுள்ளவர்கள் தங்கள் வீடுகளின் எஞ்சியுள்ள குத்தகை காலத்தின் ஒரு பகுதியை வீவகவிடமே விற்கலாம். குத்தகையில் 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை அவர்களிடமே இருக்கும்.
கிடைக்கும் தொகை, அவர்களின் மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கில் நிரப்பவும் அவர்களுக்கு மசேநிதி லைஃப் காப்புறுதித் திட்டத்தை வாங்கவும் பயன்படும். மீதத் தொகை ஏதேனும் இருந்தால் கையில் கிடைக்கும்.
61 விழுக்காட்டுக் குடும்பங்கள் குத்தகையின் 30 ஆண்டுகளை வைத்துக்கொள்ள முடிவு செய்ததாகக் கழகம் கூறியது.
விற்ற தொகையிலிருந்து ஒரு பகுதியை ஓய்வூதியக் கணக்கில் செலுத்தியவர்கள் போனஸ் தொகையாக, $7,500 முதல் $30,000 வரை பெற தகுதிபெற்றனர்.
இத்தொகை வீட்டு வகை, ஓய்வூதிய கணக்கில் நிரப்பிய தொகை ஆகியவற்றைப் பொறுத்திருக்கும் என்று வீவக கூறியது.

