ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹஃபீஸ் காஸி சிங்கப்பூருக்கு நேற்று தொடங்கி நாளை வரை மூன்று நாள் பணிசார்ந்த வருகையை மேற்கொண்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சு நேற்று அதைத் தெரிவித்தது.
திரு ஒன் தமது வருகையின்போது வெளியுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன், போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரைச் சந்திப்பார்.
அத்துடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, பிரதமர் அலுவலக அமைச்சர் முகமது மாலிக்கி ஒஸ்மான் இருவரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அதனுடன், மின்வாகனக் கட்டமைப்பு, வெள்ள பாதிப்பைச் சமாளிக்கும் நடவடிக்கைகள், வேளாண்-உணவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகளோடு அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், சிங்கப்பூர் உற்பத்தித் துறை சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் நடைபெறும் வர்த்தகக் கருத்தரங்கிலும் திரு ஒன் கலந்துகொள்வார்.
ஜோகூர் மாநிலச் செயற்குழு அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் திரு ஒன்னுடன் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.

