பொதுப் போக்குவரத்து தொடர்பாகப் பயணிகளின் திருப்திநிலை சிறிதளவு கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பொதுப் பேருந்துகளிலும் எம்ஆர்டி ரயில்களிலும் பயணம் செய்தோரின் மனநிறைவு அதிகரித்ததாக பொதுப் போக்குவரத்து மன்றம் வெளியிட்ட வருடாந்திர ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஆய்வில் 5,029 பயணிகள் பங்கெடுத்தனர்.
அவர்கள் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் 92.7 விழுக்காட்டினர் பொதுப் போக்கு வரத்துச் சேவையில் திருப்தி அடைந்ததாக ஆய்வு தெரிவித்தது. பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ஒட்டுமொத்த 10
புள்ளிகளில் சராசரியாக 7.8
புள்ளிகளைப் பெற்றது.
2021ஆம் ஆண்டில் 92 விழுக்காட்டினர் திருப்தி தெரிவித்
திருந்தனர்.
ஆறு புள்ளிகளுக்கு மேல் பெற்றால் அது பயணிகள் திருப்தி அடைந்திருப்பதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றுக்கான காத்திருப்பு நேரம் அதிக அளவில் மேம்பட்டிருப்பதாக ஆய்வில் பங்கெடுத்தோர் கூறினர். அதற்கு அடுத்தநிலையில் வாடிக்கையாளர் சேவை இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பொதுப் போக்குவரத்துச் சேவையின் நம்பகத்தன்மை தொடர்பாகப் பயணிகளின் பார்வை சற்று பாதிப்படைந்துள்ளது.
பொதுப் பேருந்துச் சேவையின் நம்பகத்தன்மை 2.4 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது. இதற்கு மாறாக, எம்ஆர்டி சேவையின் நம்பகத்தன்மை 1.5 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடியது.
கடந்த ஓர் ஆண்டில் பொதுப் போக்குவரத்துச் சேவை மேம்
பட்டிருப்பதாகக் கூறும் பயணி
களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவை மேம்பட்டிருப்பதாக 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பங்கெடுத்தோரில் 71.3 விழுக்காட்டினர் கூறினர்.
ஆனால் கடந்த ஆண்டில் 68.5 விழுக்காட்டினர் மட்டுமே பொதுப் போக்குவரத்துச் சேவை மேம்பட்டிருப்பதாகத் தெரிவித்
தனர்.
இந்நிலையில், உடற்குறையுள்ள பயணிகள், அவர்களைப் பராமரிப்பவர்கள் என 537 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
இத்தரப்பினரிடையே, பொதுப் போக்குவரத்துச் சேவையில் திருப்திநிலை அதிகிரத்துள்ளது.
அவர்களில் 91.6 விழுக்காட்டினர் மனநிறைவு அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

