செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
45e629e7-ba1c-4faf-b308-db083834d4da
-

உக்ரேனிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய இக்ஸ் ஷென்

முன்னாள் உள்ளூர் நடிகர் இக்ஸ் ஷென் (படம்) உக்ரேனிலிருந்து சிங்கப்பூர் திரும்பியுள்ளார். உக்ரேனில் போர் மூண்டதிலிருந்து அவர் அங்கு இருந்தார். உக்ரேனில் அவர் மனிதாபிமான பணிகளில் உதவி வந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்குத் திரும்பியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக 50 வயது ஷென் இன்டகிராமில் நேற்று முன்தினம் பதிவிட்டார்.

தாம் எழுதும் சுயசரிதை பற்றி கலந்துரையாட சிங்கப்பூர் திரும்பியதாக அவர் குறிப்பிட்டார். அதில் உக்ரேனில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இடம்பெறும் என்றும் சுயசரிதையை இவ்வாண்டு வெளியிட இலக்கு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முழுமைத் தற்காப்புப் பற்றியும் தாம் பேச இருப்பதாகவும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவழிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

குரங்கம்மை இனி 'எம்பாக்ஸ்'

என அழைக்கப்படும்

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு குரங்கம்மை இனி எம்பாக்ஸ் என்று அழைக்கப்படும்.

அந்நோய்க்கு முதலில் வைக்கப்பட்ட பெயருடன் தொடர்புடைய களங்கத்தைத் துடைத்தொழிக்கப் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் குரங்கம்மை எனும் சொல்லைப் பயன்படுத்தி களங்கம் விளைவிக்கப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.

உலக சுகாதார நிறுவனம் பெயர் மாற்றத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, சுகாதார அமைச்சின்கீழ் உள்ள சட்டக்கூறுகளிலும் அதன் தொடர்பான திருத்தங்களைச் செய்துவிட்டதாக திரு ஓங் கூறினார்.

"சுகாதாரப் பராமரிப்புத்துறைக்கும் பொதுமக்களுக்கும் சுகாதார அமைச்சு வெளியிடும் அறிக்கைகளில் இனி எம்பாக்ஸ் என்ற பெயர் பயன்படுத்தப்படும்," என்று திரு ஓங் தெரிவித்தார்.

பழச்சாறு, பபல்டீ, காப்பியின்

சீனி அளவு தெரிவிக்கப்படும்

இவ்வாண்டு இறுதியிலிருந்து பழச்சாறு, பபல்டீ, காப்பி, தேநீர் போன்ற உடனுக்குடன் தயாரிக்கப்படும் பானங்களில் உள்ள சீனியின் அளவைத் தெரிவிக்கும் ஊட்டச்சத்துத் தர முத்திரைகள் அவற்றின் பொட்டலங்களில் இடம்பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பானங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தானியங்கி இயந்திரங்களும் இந்த ஊட்டச்சத்துத் தர முத்திரைத் திட்டத்தின்கீழ் வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் உட்கொள்ளும் இனிப்பின் அளவைக் குறைக்க இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது. ஊட்டச்சத்து தர முத்திரை விதிமுறை கடந்த ஆண்டு டிசம்பர் 30லிருந்து நடப்புக்கு வந்தது.