அனுஷா செல்வமணி
பராமரிப்பாளர்கள் கண்காணித்து வரும் மறதி நோயாளிகள் தொலைந்து போய்விட்டால், அவர்களை எளிதில் தேடுவதற்கு சமூகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பின் 'காரா' செயலியும் நகராட்சி சேவைகள் அலுவலகத்தின் 'ஒன் சர்விஸ்' செயலியும் மறதி நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் முனைப்பில் கைகோத்துள்ளன. மறதி நோயாளிகள் தொலைந்துபோனால் அவர்களை முடிந்த அளவு விரைவாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இவை கடப்பாடு தெரிவித்துள்ளன.
புக்கிட் பாத்தோக் நியூ ஹொராய்ஸன் நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தப் பங்காளித்துவத்தின் தொடக்கவிழாவில் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தற்போது 100,000 முதியவர்கள் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏழு ஆண்டுக்குள் அது 150,000ஆக அதிகரிக்கக்கூடும்.
பராமரிப்பாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்தச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். மறதி நோயாளி ஒருவர் தொலைந்துவிட்டால், 'காரா' செயலியின் புதிய அம்சம் மூலம் பராமரிப்பாளர்கள் புகார் அளிக்கலாம்.
'காரா' உறுப்பினர்களிடம் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பவர் பற்றித் தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, தொலைந்து போனவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்தின் குடியிருப்பாளர்களுக்கு 'ஒன் சர்விஸ்' செயலி மூலம் அறிவிக்கப்படும்.
தொலைந்துபோனவரின் புகைப்படம், வெளித்தோற்றம், அவர் எங்கு கடைசியாகக் காணப்பட்டார் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். தொலைந்துபோனவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் செயலியைப் பயன்படுத்துவோருக்கு தகவல் தரப்படும்.
கடந்த மாத நிலவரப்படி, 'காரா' செயலியை 4,000 பேர் பயன்படுத்துகிறார்கள். 'ஒன் சர்விஸ்' செயலியை 500,000க்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சமூகத்தில் யாராவது பார்ப்பதற்கு குழப்பமாகவோ தொலைந்துபோனதுபோலவோ தென்பட்டால், தொலைந்துபோனவராக நம்பப்படுபவர் 'காரா' அட்டை வைத்துள்ளாரா என்று பொதுமக்கள் முதலில் கவனிக்க வேண்டும்.
அட்டை இருக்கும் பட்சத்தில், அதற்குப் பின்னால் இருக்கும் கியூஆர் குறியீட்டைத் திறன்பேசியில் வருடி, பொதுமக்கள் தங்கள் பெயர், திறன்பேசி எண் ஆகிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். பிறகு, அழைப்புப் பொத்தான் மூலம் பராமரிப்பாளர் அல்லது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளலாம்.
புதிய அம்சம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இதுவரை ஏழு மறதி நோயாளிகள் 'காரா' செயலி மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
"மறதி நோய் உள்ளவர்களைப் பராமரிப்பது எளிதல்ல. அவர்கள் தொலைந்துவிட்டால், குடும்பத்தினரும் பராமரிப்பாளரும் எதிர்கொள்ளும் வேதனை மிகக் கவலைக்குரியது. இந்தச் செயலிகள் அதைப் போக்க வழிவகுக்கும். செயலிகளை மட்டும் சார்ந்து இருக்காமல், நாம் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். நோயாளிகள் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்வதற்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார் மூத்த துணையமைச்சர் சிம் ஆன்.
கடந்த 15 ஆண்டுகளாக மனநலத் துறையில் பணிபுரிந்து வரும் திரு சந்திரஜோதி, நியூ ஹொராய்ஸன் நிலையத்தின் குழும மேலாளராக இருக்கிறார். இவருடைய தாயார் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். ஏழு சகோதரர்களுடன் பிறந்த சந்திரஜோதி, தன்னுடைய தாயாரின் மறைவுக்குமுன் அவரைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்ததை நினைவுகூர்ந்தார்.
மறதி நோயை அலட்சியப்படுத்தக்கூடாது என்று கூறும் அவர், இதுகுறித்த பொதுமக்களின் விழிப்புணர்வுக்கு இச்செயலிகள் உதவும் என்று குறிப்பிட்டார்.

