செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
995bdb67-1b79-4327-985f-2308735e1156
-

பிரதமர் லீக்கு இணையத் துன்புறுத்தல்; ஆடவருக்கு கடும் எச்சரிக்கை

பிரதமர் லீ சியன் லூங்கிற்குத் துன்புறுத்தும் வகையில் தகவல் அனுப்பிய மனநலம் குன்றிய ஆடவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதன் தொடர்பில் ஆடவருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாய் ஃபுய் செட் எனும் 44 வயது மலேசிய ஆடவர் சென்ற ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, பிரதமர் லீயை ஃபேஸ்புக் மெசஞ்சர் தளம் வழியாகத் தொடர்பு கொண்டார். சீகேட் சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தீயிட்டு எரிக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் சிங்கப்பூர் மனநலக் கழகத்தில் பரிசோதனைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.

உண்மை, பொய்யைப் பிரித்தறிய இயலாத மனநலக் கோளாற்றால் சாய் பாதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை விடுவிக்கக் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டதாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. இரண்டு மாதங்களுக்குமேல் சாய் தடுத்து வைக்கப்பட்டதையும் கருத்தில்கொண்டதாக அது கூறியது. இம்மாதம் 3ஆம் தேதி சாய் விடுவிக்கப்பட்டார்.

'ஃபேர்பிரைஸ்' ஊழியருக்கு லஞ்சம் தந்த ஆடவருக்குச் சிறை, அபராதம்

மீன் மொத்த விற்பனை தொடர்பில் 'ஃபேர்பிரைஸ்' பேரங்காடியின் முன்னாள் ஊழியருக்கு லஞ்சம் தந்த ஆடவருக்கு நேற்று ஏழு மாதச் சிறைத்தண்டனையுடன் $4,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில், கோ சுன் சியோங் பணிபுரிந்த 'ஃபிஷ் விஷன்' நிறுவனத்தின் இயக்குநர் சியூ கிம் ஹுவி, 'ஃபேர்பிரைசின்' முன்னாள் அதிகாரி லிம் கியான் கொக் ஆகியோருக்கும் தொடர்பு உண்டு.

தங்கள் நிறுவனத்தில் கூடுதலாக மீன் கொள்முதல் செய்வதற்கு ஒரு கிலோகிராமுக்கு 20 காசு என்ற கணக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோ, லிம்மிடம் ஏறக்குறைய $25,000 பணத்தைக் கொடுத்தார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் பணம் இவ்வாறு கைமாறியது. இதில் பாதியை லிம் அவரிடமே திருப்பிக்கொடுத்ததாகக் கூறப்பட்டது.

இந்த உடன்பாட்டிற்கேற்ப, அன்றாடம் 400 முதல் 600 கிலோகிராம் மீனை லிம் 'ஃபேர்பிரைசிற்காக' வாங்கினார். லஞ்சம் பெறுவதற்குமுன் தினசரி 250 கிலோகிராம் மீன் மட்டுமே வாங்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதையும் கோ ஒப்புக்கொண்டார். இதன் தொடர்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு எந்த வாகனத்தையும் ஓட்டுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.