ரொக்க அன்பளிப்புகள், மானியங்கள், நிவாரணம், கூடுதல் கால தந்தையர் விடுப்பு எனப் பல்வேறு வகைகளிலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர் மேம்பட்ட ஆதரவை எதிர்பார்க்கலாம். பிள்ளை வளர்ப்பின் ஆரம்பகாலத்தில் குடும்பங்களுக்கான ஆதரவை அரசாங்கம் ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்த இத்திட்டங்கள் குறித்து நேற்று தமது வரவுசெலவுத் திட்ட உரையில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
குழந்தை போனஸ் ரொக்க
அன்பளிப்புத் தொகை அதிகரிப்பு
'குழந்தை போனஸ்' ரொக்க அன்பளிப்புத் திட்டத்தின்கீழ் இனி பிறக்கும் குழந்தைகளுக்குக் கூடுதலாக $3,000 வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார். குழந்தை ஆறரை வயது ஆகும்வரை நிதி ஆதரவு வழங்கும் நோக்கில் ஆறு மாத இடைவெளியில் தொகை பிரித்துத் தரப்படும் என்று அவர் விளக்கினார். தகுதிபெறும் முதலாவது, இரண்டாவது பிள்ளைகளுக்கு $8,000க்குப் பதிலாக $11,000 வழங்கப்படும். மூன்றாவது பிள்ளை முதல் $10,000க்குப் பதிலாக $13,000 வழங்கப்படும்.
குழந்தை வளர்ப்பில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க தற்போது குழந்தையின் முதல் 18 மாதங்களில் ஐந்து தவணை
களாக குழந்தை போனஸ் ரொக்க அன்பளிப்புத் தொகை தரப்படுகிறது.
பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் கூடுதல் நிதி
பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு தொடக்க மானியம் $2,000 உயர்வதாகவும் திரு வோங் குறிப்பிட்டார். இதன்படி நேற்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்காக $3,000க்குப் பதிலாக $5,000 வழங்கப்படும். பாலர் பள்ளி, சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான செலவுகளுக்குப் பெற்றோர் இத்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தம்பதியரின் முதலாம், இரண்டாம் குழந்தைக்கு அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி வழங்கும் அதிகபட்சத் தொகையும் $1,000 அதிகரிக்கவுள்ளது.
இதன்படி, முதல் குழந்தைக்கு அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளியாக $4,000 வரையிலும் இரண்டாவது குழந்தைக்கு $7,000 வரையிலும் தரும். மேம்படுத்தப்பட்ட திட்டங்களால் முதல் குழந்தைக்குப் பெற்றோர் $24,000 வரையிலும் அடுத்தடுத்த பிள்ளை
களுக்கு $37,000 வரையிலும் நிதி ஆதரவுக்குத் தகுதிபெறலாம்.
குழந்தை ஆதரவு மானியத்
திட்டம் நீட்டிப்பு
பெற்றோருக்குக் கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கும் இவ்வாண்டு பிப்ரவரி 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குழந்தை பிறந்திருந்தால் அவர்
களுக்கு குழந்தை ஆதரவு மானியத் தொகையாக $3,000 வழங்கப்படும்.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த சிங்கப்பூர் குழந்தைகளுக்காக கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் இந்த மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலை செய்யும் தாய்மாருக்கான பிள்ளை வரி நிவாரணம்
குழந்தை பெற்ற பிறகும் தாய்மார்கள் தொடர்ந்து ஊழியரணியில் நீடிப்பதை ஊக்குவிக்க 'வேலை செய்யும் தாய்மாருக்கான பிள்ளை வரி நிவாரணத்' திட்டம் அறிமுகமானது.
குழந்தைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறந்தாலோ தத்தெடுக்கப்பட்டாலோ தாய்மாரின் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்குப் பதிலாக மாறாத தொகை நிவாரணமாக மாற்றப்படும்.
தகுதிபெறும் வேலை செய்யும் தாய்மார்கள், முதல் குழந்தைக்கு $8,000யும் இரண்டாவது குழந்தைக்கு $10,000யும் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு $12,000 வரி நிவாரணமும் கோரலாம்.
வெளிநாட்டுப் பணிப்பெண் தீர்வை வரி நிவாரணம்
வேலை செய்யும் திருமணமான மாதருக்கான வெளிநாட்டுப் பணிப்பெண் தீர்வை 2025ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படஉள்ளது. 16 வயதுக்குக் கீழ் இளம் பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் இக்குறிப்பிட்ட பிரிவினருக்கு உதவிவர, ஏற்கெனவே வெளிநாட்டுப் பணியாளர் தீர்வை சலுகை இருப்பதால் இத்திட்டம் நிறுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

