சிங்கப்பூரில் ஆய்வு, உருவாக்கம் போன்ற புத்தாக்கத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக வரிக்கழிவுகள் கிடைக்கும். நிறுவனங்கள் புத்தாக்க முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த ஊக்குவிக்க இது இடம்பெறுகிறது. சிறிதளவு வரி செலுத்துகின்ற அல்லது வரியே செலுத்தாத சிறிய நிறுவனங் களுக்கு ஒரு விருப்ப உரிமை கிடைக்க இருக்கிறது.
சிறிய நிறுவனங்கள், வரி விதிப்புக்கு உள்ளாகாத ரொக்க விநியோகத்தைப் பெற விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் 2023 வரவு செலவுத்திட்டத்தைத் தாக்கல் செய்தார்.
'நிறுவன புத்தாக்கத் திட்டம்' என்ற ஒரு திட்டம் பற்றி அவர் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி இவை எல்லாம் கிடைக்க இருக்கின்றன.
நாடு முழுவதுமே புத்தாக்கத்தைப் பேணி வளர்த்து அதைக் கட்டிக்காக்க வேண்டிய தேவை இருப்பதாக துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் பொருளியல் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது, செலவு கூடிவிட்டது. இந்தச் சூழலில் புத்தாக்க முயற்சிகள் நிறுவனங்களுக்குச் சிரமமானதாக இருக்கக்கூடும் என்றார் திரு வோங்.
நிறுவனங்கள், இப்போது புத்தாக்கம் தொடர்பான நான்கு வகை செயல்திட்டங்களின் பேரில் 250%வரை வரிக் கழிவு களைப் பெறுகின்றன.
இந்தக் கழிவுகள் அந்த நான்கு வகை செயல்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 400 விழுக்காடு வரை அதிகரிக்கப்படும்.
அதோடு, புதிதாக மேலும் ஒரு செயல்திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஆய்வு உருவாக்கத்தில் $1,000 தொகையையும் அறிவுசார் சொத்துப் பதிவின் பேரில் $1,000 தொகையையும் செலவிடும் நிறுவனம், தனது வரி விதிக்கத்தக்க வருவாயில் மொத்தம் $8,000 வரை கழித்துக்கொள்ளலாம்.
இந்தப் புதிய திட்டம் மூலம் நிறுவனங்கள் தாங்கள் செய்யும் புத்தாக்க முதலீடுகளை 70% வரை மிச்சப்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் விளக்கினரார்.
இனிமேல்தான் லாபம் பார்க்கவேண்டிய, சிறிதளவு வரி செலுத்துகின்ற, அல்லது வரியே செலுத்தாத புதிய நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், இதர நிறுவனங்கள், புதிய ரொக்க மாற்றுத் திட்டம் மூலம் பயன் அடையலாம்.
அதாவது இத்தகைய நிறுவனங்கள் ஐந்து வகை செயல்திட்டங்களில் செய்துள்ள மொத்த செலவினங்களில் 20% அளவை, கூடியபட்சமாக $20,000 வரை பணமாக்கிக்கொள்ளலாம். அதாவது $100,000 வரைப்பட்ட செலவினத்தை மிச்சப்படுத்தலாம்.
இவை ஒருபுறம் இருக்க, உள்ளூர் நிறுவனங்கள் உலக அளவில் போட்டித்திறனுடன் திகழ உதவுவதற்கான முயற்சிகள் தொடரும்.
'சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இணை முதலீட்டு நிதி' என்ற ஒரு நிதி மூலமாக கூடுதலாக $150 மில்லியன் ஒதுக்கப்பட்டு அந்தத் தொகை நம்பிக்கை தரும் நிறுவனங்களில் முதலிடப்படும்.
சென்ற ஆண்டில் அறிமுகமான சிங்கப்பூர் குளோபல் என்டர்பிரைசஸ் திட்டத்திற்கு மேலும் $1 பில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

