புகைப்பவர்கள், சிகரெட், சுருட்டு, புகையிலைக்கு இனிமேல் அதிக பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். அரசாங்கம் அவற்றுக்கான சுங்க வரியை 15% கூட்டுகிறது.
அனைத்து வகை புகை யிலைப் பொருள்களுக்கும் உரிய சுங்க வரி உயர்த்தப் படுவதால் ஆண்டு ஒன்றுக்கு அரசாங்கத்திற்கு கூடுதலாக சுமார் $100 மில்லியன் வருவாய் கிடைக்கும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் நேற்று வரவுசெலவுத் திட்டத்தில் தெரிவித்தார்.
புகைப்பவர்கள் இப்போது ஒரு சிகரெட்டுக்கு 42.7 காசு வரி செலுத்துகிறார்கள். இந்த வரி இனி 49.1 காசாகும்.
அதாவது 20 சிகரெட்டு களைக் கொண்ட ஒரு 'மால்பரோ' பாக்கெட் சிகரெட் $15.52க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இதன் விலை $14 என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
சுருட்டுக்கு விதிக்கப்படும் தீர்வை ஒரு கிராமுக்கு முன்பு 42.7 காசு. இது 49.1 காசாக ஆகியுள்ளது.
மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு ஒரு கிராமுக்கு புதிய வரி 37.8 காசு. இது முன்பு 32.9 காசாக இருந்தது.
சிகரெட் உள்ளிட்ட புகை யிலைப் பொருள்களுக்கு உரிய வரி 2018ல் 10 விழுக்காடு கூடியது. அதற்கு முன் 2014ல் அந்த வரி 10 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

