சாதாரண சிங்கப்பூரர்கள் அன்றாடச் செயல்கள் மூலம் சமூகத்திற்காகப் பணிபுரிவது இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு தினத்தின் கருப்பொருளாகும்.
இதற்கேற்ப வாழ முயல்கிறார் திரு அம்ரிஷ் நாதன் (படம்). பல பின்னடைவுகளைக் கடந்து, தடம்புரண்ட தன் வாழ்வை மாற்றியமைத்தவர் இவர்.
போதைப்பொருள், மதுபானம் ஆகியவற்றின்பால் ஈர்க்கப்பட்டு இளம்வயதில் பலமுறை சட்டத்தை மீறினார்.
வேலைப்பளுவை மறக்க நாடிய இவை பின்பு இவரை அடிமைப்படுத்திவிட்டன.
நன்னடத்தைக் கண்காணிப்புக் காலகட்டத்தில், கண்காணிப்புக் குழுவின் நிபந்தனை களைப் பூர்த்தி செய்யாததால் ஐந்தாண்டுகளில் இருமுறை இவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தன்னால் குடும்பத்தினர் கலங்கியது மனத்தை உறுத்தவே தன் வாழ்வை மறுபரிசீலனை செய்தார் அம்ரிஷ்.
போதைப்பொருள்களும் மது பானமும் உடல்நிலையையும் வாழ்வையும் சீர்குலைத்ததை உணர்ந்தார். விடுதலையான பிறகு ஒரு புது வாழ்வைத் தொடங்க விரும்பினார்.
"சிறைக்காலம் தந்த வலியால் ஆழ்ந்த மனவுறுதி ஏற்பட்டது. என் தீய பழக்கங்களை முற்றிலும் ஒழித்திட அது உதவியது" என்கிறார் அம்ரிஷ்.
தற்போது மனநலக் கழகத்தின் 'ஃபோரென்சிக் சைக்கியாட்ரி கம்யூனிட்டி சர்விசஸ்' பிரிவில் சக முன்னாள் கைதிகளுக்கு நிபுணத்துவ ஆலோசகராகப் பணிபுரிகிறார் 32 வயது அம்ரிஷ் நாதன்.
மனநலப் பிரச்சினை உடைய சிறைக்கைதிகளுக்கு ஆதரவு வழங்குவதும் இவரது பணி.
கடந்த மூன்று ஆண்டுகளாக, திருந்திவாழ விரும்பும் முன்னாள் குற்றவாளிகளுக்கு இவர் உதவிவருகிறார்.
தன்னுடன் இணைக்கப்படும் ஒவ்வொரு குற்றவாளியுடனும் தனிப்பட்ட முறையில் உரையாடி, அவர்களின் வாழ்க்கைச் சவால்களைக் கேட்டறிந்து, தனது அனுபவங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் அவர்களுடன் பகிர்ந்து ஆதரவு அளிக்கிறார் அம்ரிஷ்.
முன்னாள் குற்றவாளிகள் பழையநிலைக்குத் திரும்பாமல் பார்த்துக்கொள்வது பெரும் சவால் என்று கூறும் இவர், அவர்கள் கோபங்கொண்டு குரலை உயர்த்தினாலும் பரிவு காட்டுகிறார்.
பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு சிறுவன் போதைப்பொருளுக்கு அடிமையாகி, மனநலப் பிரச்சினைகளுடன் போராடியநிலையில் இவருடன் இணைக்கப்பட்டார்.
தான் வழங்கிய ஆதரவால் படிப்படியாக மேம்பட்டு, அவர் பட்டக்கல்வியும் முடித்திருப்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அம்ரிஷ்.
முழுமைத் தற்காப்பு தினத்தை அனுசரிக்கும் இவ்வேளையில், முன்னாள் குற்றவாளிகள் பற்றிய பொதுமக்களின் பார்வை மாறவேண்டும் என்பது இவரது விருப்பம்.
பெரும்பாலான குற்றவாளிகள், செய்த தவறுகளை திருத்திக்கொள்ள விரும்புகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு அளித்து நல்ல மனிதர்களாக மாற அனைவரும் ஊக்குவிக்கலாம் என்கிறார் இவர்.