துருக்கி, சிரியா ஆகியவற்றில் அண்மையில் நேர்ந்த நிலநடுக்கங்களில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியோரைத் தேடி மீட்கும் பணியில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேடல், மீட்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் ஈடுபட்டுள்ளன.
மீட்புக் குழுவினருடன் இணைந்து பணியாற்றும் இவை, மனிதநேய உதவி அதிகாரிகள் எட்ட இயலாத இடங்களிலும் தேடல் பணியில் ஈடுபடுகின்றன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இத்தகைய நான்கு மோப்ப நாய்களை, துருக்கியின் கஹ்ரமன்மராஸ் நகருக்கு அனுப்பியுள்ளது.
'லெப்ரடார்' ரகத்தைச் சேர்ந்த 'பிரெஞ்சி', 'ரிஸ்ஸோ' ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
பாதிக்கப்பட்டோர் சிக்கியுள்ள இடங்களைக் கண்டறிய இவை உதவுவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
தாய்லாந்தின் 'சியெர்ரா', 'சகாரா' எனப்படும் மோப்ப நாய்களும் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துவருகின்றன. மிகவும் குளிரான சூழலிலும் இவை தேடல் பணியில் உதவுகின்றன.
மலேசியாவில் இருந்து 'டென்டி', 'ஃப்ரேங்கி' எனும் மோப்ப நாய்கள் துருக்கியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சென்ற சனிக்கிழமை இவ்விரு நாய்களும் இடிபாடுகளில் ஆறு நாள்களாக சிக்கியிருந்த ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை மீட்க உதவியதாகக் கூறப்பட்டது. பாத்தாங் காலி நிலச்சரிவின்போது இவ்விரு மோப்ப நாய்களும் தேடல், மீட்புப் பணியில் உதவின.
இரண்டு வயதாகும் மோப்ப நாய்கள் 'பிரெஞ்சி', 'ரிஸ்ஸோ' இரண்டும் உடன்பிறந்தவை.
படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

