'சேட்ஸ்' எனப்படும் சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவைகள் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் $500,000 நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு காலாண்டுகளில் இழப்பைச் சந்தித்த நிறுவனம், விமானப் போக்குவரத்து தொடர்ந்து மீட்சியடைவதால் இவ்வாறு லாபம் ஈட்டியுள்ளது.
முதலாம் காலாண்டில் $9.9 மில்லியனும் இரண்டாம் காலாண்டில் $22.5 மில்லியனும் நிகர இழப்பு ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட 90.2 விழுக்காடு குறைவு என்று கூறப்பட்டது. நிறுவன இணைப்பு நடவடிக்கைகள் இதற்குக் காரணம். சென்ற நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் $5.1 மில்லியன் நிகர லாபம் பதிவானதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் நிவாரண உதவி இல்லாவிட்டால் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் $13.7 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அது கூறியது. அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலாண்டின் வருவாய் 54.5 விழுக்காடு உயர்ந்து $475.7 மில்லியனாகப் பதிவானது. உணவுத் தீர்வு வர்த்தகப் பிரிவின் வருமான வளர்ச்சி இதற்கு முக்கியக் காரணம்.
மூன்றாம் காலாண்டின் நிகர லாபம், பொருளியல் நிச்சயமற்ற சூழலிலும் நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடு மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாக 'சேட்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெர்ரி மோக் கூறினார்.
சீனா அதன் எல்லைகளை மீண்டும் திறந்திருப்பதால் விமானப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

