சிங்கப்பூர் காவல் படையில் முழு நேர தேசிய சேவையாளராக இருந்தபோது, ஜோனதன் சுவா வெய் கோங் எனும் ஆடவர் பெண்கள் கழிப்பறையில் அத்துமீறி நுழைந்தார். அப்போது பெண் அதிகாரி ஒருவர் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சுவா தனது கைத்தொலைபேசியை, அதிகாரி குளித்துக்கொண்டிருந்த அறையின் மேல்புறத்தில் வைத்தார்.
'ஆவி' ஒன்று தன்னைப் பீடித்திருப்பதாகவும் அதனால் தான் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று தனக்கு நினைவில்லை என்றார் அவர்.
விசாரணைக்குப் பிறகு நேற்று சுவா மீது அத்துமீறி நுழைந்தது, பெண்ணை மானபங்கப்படுத்தியது ஆகியவை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி பற்றிய மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை. 2019ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி, பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு சுவாவுடன் மேலும் இரு தேசிய சேவையாளர்கள் ஆண்கள் கழிப்பறைக்குச் சென்றனர். தாங்கள் முதலில் வெளியேறியதாகவும் சுவா சிறிது நேரங்கழித்தே தங்களுடன் இணைந்துகொண்டதாகவும் அவ்விருவரும் கூறினர்.
பாதிக்கப்பட்டவர் புகாரளித்ததன்பேரில் சுவாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலில், தான் தவறுதலாகப் பெண்கள் கழிப்பறைக் கதவைத் திறந்ததாகவும் அப்போது யாரும் அங்கு குளிக்கவில்லை என்றும் அவர் பொய்யுரைத்தார்.
அடுத்த மாதம் 22ஆம் தேதி வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

