பீஷான் ஸ்திரீட் 12 புளோக் 110இல் காக்கைக் கூட்டம் ஒரு வாரமாக அட்டகாசம் செய்து அவ்வழியாகச் செல்பவர் களைத் தாக்குவதாகத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்குள்ள காக்கை எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தேசிய பூங்கா கழகம் தெரிவித்துள்ளது. அது குறித்து கழகம் பீஷான்-தோ பாயோ நகரமன்றத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இவ்வாண்டு தொடக்கத்தில் அப்பகுதியில் 20 நிமிடத்தில் 10 பேரைக் காக்கைக் கூட்டம் தாக்கியதாக ஷின் மின் செய்தி வெளியிட்டது. அத்தகைய தாக்குதல்கள் குறைந்துள்ளபோதும், காக்கைக் கூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கவே செய்தனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று கூறியது.
சில காகங்கள், வழிப்போக்கர்களின் பக்கத்தில் பறந்துசென்று பயமுறுத்தின. சில அவர்களைத் தாக்கின. இது ஒரு முறைமட்டும் நிகழவில்லை என்று சிலர் புகார் கூறினர்.
காக்கைக் கூட்டத்தின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட, கடந்த 7ஆம் தேதியிலிருந்து அப்பகுதியில் உள்ள காக்கைக் கூடுகளைக் கண்காணித்து அவற்றை அகற்றத் தொடங்கியுள்ளதாக தேசிய பூங்கா கழகம் கூறியது.
மரங்கள் கத்திரிக்கப்படும் என்றும் காகங்களுக்குப் பொறி வைக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது. காக்கைக் கூட்டம் முன்புபோல சுட்டுக்கொல்லப் படாது. மாறாக சிக்கிய காகங்கள் வலியில்லாமல் கொல்லப்படும்.
காகங்கள் பெருகுவதைத் தடுக்க பொதுமக்கள் பங்காற்றவேண்டும், அவற்றுக்கு தீனி போடக்கூடாது என்று நிபுணர்கள் கூறினர். காக்கைக் கூட்டம் பற்றிய விழிப்புணர்வு திட்டத்தை பீஷான்- தோ பாயோ நகரமன்றத்துடன் தேசிய பூங்கா கழகம் நேற்று தொடங்கியது.