சமையற்காரர், மேசைப் பணியாளர் போன்றவர்களுக்கு மூவாண்டுகளில் சம்பளம் கூடும்
சமையற்காரர்கள், மேசைப் பணியாளர்கள் போன்ற குறைந்த சம்பள ஊழியர்கள் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். உணவு சேவைத் துறையில் படிப்படியான சம்பள உயர்வு முறை நடப்புக்கு வரவுள்ளதே அதற்குக் காரணம்.
அதன்படி, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளாக உள்ள குறைந்த சம்பள உணவுச் சேவை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2023 முதல் 2025 வரை கூடும். அவர்கள் 19 விழுக்காடு வரை நிலையான சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து, ஏறத்தாழ 12,000 முழுநேர உணவுச் சேவை ஊழியர்களின் சம்பளம், படிப்படியான சம்பள உயர்வு முறையின் கீழுள்ள ஆரம்பநிலை ஊதியமான $1,750க்குக் கூடும்.
அந்த அடிப்படைச் சம்பளம், 2025ல் $2,080ஆக உயரும். அதாவது மூவாண்டுகளில் அச்சம்பளம் சுமார் 19 விழுக்காடு கூடும்.
சிங்கப்பூரில் உள்ள 26,000 முழுநேர உணவுச் சேவை ஊழியர்களில் 17,000 பேர் குறைந்த சம்பள ஊழியர்களாகக் கருதப் படுகின்றனர். அவர்களில் ஏறத்தாழ 12,000 ஊழியர்கள், படிப் படியான சம்பள உயர்வுமுறையின் ஆரம்பநிலை ஊதியத்தைவிட குறைவான சம்பளம் பெறுகின்றனர்.
உணவுச் சேவைகளுக்கான முத்தரப்புப் பங்காளித்துவக் குழு இத்தகவல்களை நேற்று தெரிவித்தது. இத்துறை ஊழியர் களுக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குழு முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
இந்த முறையில் ஊழியர்களுக்கான தெளிவான தொழில்முன்னேற்றப் பாதையும் தேவையான பயிற்சிகளும் வகுக்கப்பட்டுள்ளன. உணவுச் சேவைகள் முத்தரப்புப் பங்காளித்துவக் குழுவில் அரசாங்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள், துறைசார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
சிங்கப்பூரில் வசிக்கும் சுமார் 41,000 முழுநேர, பகுதிநேர உணவுச் சேவை தொழிலாளர்கள் புதிய பரிந்துரைகளால் பயன் அடையவுள்ளனர்.
புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முதலாளிகளுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். முத் தரப்புப் பங்காளிகளும் அது பற்றிய தகவல்களை முதலாளி களிடம் பகிர்ந்துகொள்வர்.
ஆறு மாதத்துக்குப் பின்னர், படிப்படியான சம்பள உயர்வு முறையை ஏற்றுக்கொள்ளாத முதலாளிகள் வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்படலாம் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. அதாவது, அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் வேலையில் சேர்க்கப் புதிதாக வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கவோ தற்போதைய ஊழியர்களின் வேலை அனுமதியைப் புதுப்பிக்கவோ தற்காலிகத் தடை விதிக்கப்படலாம்.
படிப்படியான சம்பள உயர்வு முறை 2012ல் தொடங்கப்பட்டது.
உணவுச் சேவைகள் துறை அதை ஏற்றுக்கொண்டுள்ள ஏழாவது துறையாகும். துப்புரவு, பாதுகாவல், தோட்டக்கலை உள்ளிட்ட ஆறு துறைகளைச் சேர்ந்த குறைந்த சம்பள ஊழியர்கள் இதுவரை அந்த முறையின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

