துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ $1.7 மி. நிதி
துருக்கி-சிரியாவில் மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு $1.7 மில்லியனுக்கும் அதிகமாக சிங்கப்பூரில் திரட்டப்பட்டுள்ளது.
துருக்கியை தளமாகக்கொண்ட உதவி அமைப்பான ஹைரத் யார்டிம் உடன் இணைந்து சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட தொண்டு நிறுவனமான ரஹ்மதன் லில் ஆலமின் அறக்கட்டளை (ஆர்எல்ஏஎஃப்) வெள்ளிக்கிழமை தொடங்கிய நிதித்திரட்டு மூலம் ஆறு நாள்களில் $1 மில்லியனுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது. இப்பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், உணவு, மெத்தைகள், போர்வைகள், குளிர்கால ஆடைகள் போன்ற பொருள்களை வழங்கும்.
மேலும், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக டிபிஎஸ் வங்கியின் மூலம் நேற்று மாலை நிலவரப்படி $720,000 திரட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர் என நம்பப்படும் மாது ஆஸ்திரேலியாவில் மரணம்
சிங்கப்பூரர் என்று நம்பப்படும் 32 வயது மாது, ஆஸ்திரேலிய விரைவுச்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் ஓட்டிச்சென்ற கார் திசைமாறிச் சென்று மரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
அவருடன் பயணம் செய்த 36 வயது ஆடவருடன் காரில் இருந்த நாயும் மாண்டது. சிட்னிக்கு 600 கிலோமீட்டர் வடமேற்கில் உள்ள மோரி என்ற ஊரில், நியூவெல் விரைவுச்சாலையில் கடந்த 5ஆம் தேதி காலை ஏழு மணிக்கு விபத்து நிகழ்ந்தது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை அந்தப் பெண்ணின் அடையாளத்தையோ குடியுரிமையையோ உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அப்பெண்ணின் தாயார் சிங்கப்பூரர் என்பதையும் சிங்கப்பூரர் ஒருவர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வாரம் உயிரிழந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அருங்காட்சியகத்தில் அட்டிகை
புதுப்பபொலிவுடன் திறக்கப்படவுள்ள பெரனாக்கான் அருங்காட்சியகத்துக்குச் செல்வோர் செட்டி மலாக்கா பெண்கள் அணிந்த அழகுமிகு அட்டிகைச் சங்கிலியைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆர்மேனியன் ஸ்திரீட்டில் உள்ள பெரனாக்கான் அருங்காட்சியகம் நான்காண்டு புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு, நாளை 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு மீண்டும் திறந்துவிடப்படும். மூன்று மாடிகள் கொண்ட அருங்காட்சியகத்தில் நகைகளுக்கான புது தனிக் கூடம் உள்ளிட்ட ஒன்பது கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 800 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
செட்டி மலக்கா எனப்படும் இந்தியர்கள், சீனர்கள், ஜாவி இனத்தவர், யூரேசியர் ஆகியோர் அடங்கிய பெரனாக்கான் சமூகம் உருவான வரலாறு, அவர்களின் வாழ்க்கை முறை, ஆடை அணிகலன்கள், அச்சமூகத்தின் தற்போதைய கலாசாரம், அடையாளம் ஆகியவற்றைக் அக்கூடங்கள் எடுத்துரைக்கும்.
அருங்காட்சியகத்தின் திறப்புவிழாவை ஒட்டி, வரும் 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை கொண்டாட்டம் நடைபெறும். ஆர்மேனியன் ஸ்திரீட்டில் வெளிப்புற கலைநிகழ்ச்சிகள், பயிலரங்குகள், உணவு, பானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன நாட்டவர் அதிக எண்ணிக்கையில் இங்கு வீடுகளை வாங்கவில்லை
சிங்கப்பூர்வாசி அல்லாத சீன நாட்டவர் இங்கு கணிசமான எண்ணிக்கையில் வீடுகளை விற்று வாங்கவில்லை என்றும் வாடகைக்கு எடுக்கவில்லை என்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு தனியார் சொத்துகள் விற்று வாங்கப்பட்ட எல்லாப் பரிவர்த்தனைகளிலும் சிங்கப்பூரில் வசிக்காத சீன நாட்டவர் 1% பங்கும் தனியார் வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்ட பரிவர்த்தனைகளில் 7% பங்கும் வகித்தனர். குமாரி இந்திராணி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அதைத் தெரிவித்தார்.
பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் (ஹவ்காங்) கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களில் சிங்கப்பூரில் வசிக்காத சீன நாட்டவர் 14% பங்கை வகித்தனர். அவர்கள் வீவக வீடுகளை வாங்க அனுமதியில்லை என்றார் குமாரி இந்திராணி.

