கருணாநிதி துர்கா
கம்போங் கிளாமில் இந்த ஆண்டு பெரிய அளவில் ரமலான் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை 33 நாள்களுக்கு நடைபெறவுள்ள ரமலான் மாத சந்தை, நிகழ்ச்சிகள், அதிகமானோர் பங்கேற்கும் நோன்பு துறப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மஸ்கட் தெரு, கந்தஹார் தெரு, பாக்தாத் தெரு, பஹாங் தெரு, சுல்தான் கேட், அலிவால் ஸ்திரீட் கோச் பார்க், சுல்தான் பள்ளிவாசல் பகுதிகளை ஒட்டிய கம்போங் கிளாம் பகுதியின் ஏழு இடங்களில் இந்த சந்தை அமைகிறது.
160க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறவுள்ள சந்தையில் கூடுதலான இந்திய விற்பனையாளர்கள் இருப்பர் என்று கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் 'ஒன் கம்போங் கிளாம்' தொண்டூழிய அமைப்பு தெரிவித்தது.
ஈராண்டுகளுக்குப் பிறகு கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீங்கி இடம்பெறும் முதல் ரமலான் சந்தை என்பதால், 550,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பதாகக் கூறினார் ஒன் கம்போங் கிளாமி'ன் தலைவர் திரு முகமது ஸக்கி மரூஃப்.
பல்வேறு உணவுக் கடைகளுடன், அங்கே உட்கார்ந்து சாப்பிட வசதியாக ஈரடுக்குக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டி வசதிகளுடனும் சில கடைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த வட்டாரத்தின் பாரம்பரியச் சிறப்புகளை எடுத்துக் கூறும் ஒளிக்காட்சிகள், கலைப்படைப்புகள், நிகழ்ச்சிகளோடு பல நிகழ்ச்சிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வசதி குறைந்தோருக்கு உதவ கடைசி 10 நாள்கள் நன்கொடை திரட்டு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
சுல்தான் பள்ளிவாசலுக்கும் சமூக உண்டியலுக்கும் நிதி திரட்டும் முயற்சிகளில் ஒன்றாகவும் சமூக ஒன்றுகூடலாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்கும் மிகப்பெரிய நோன்பு துறப்பு நிகழ்வு அரப் ஸ்திரீட்டில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தை ஒட்டி கேலாங் சிராயில் 700 கடைகளுடன் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரமலான் சந்தை மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 22ஆம் தேதி நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
dhurga@sph.com.sg

