தமது கடையின் எதிரே ஒரு மேசையில் ஒரு தோள்பை கவனிப்பாரின்றிக் கிடந்ததைக் கவனித்தார் திருவாட்டி ஜேலின் வூன். அதை எடுத்துப் பார்த்த அவருக்கு ஆச்சரியம்.
"நான் பையை எடுத்துப் பார்த்தேன். உள்ளே $100 பணத்தாள் கட்டுகள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் மொத்தம் எவ்வளவு தொகை என்று தெரியவில்லை," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் 37 வயதான அந்தக் கடைக்காரர்.
"அந்த மேசையில் ஒருவர் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அதிகளவு பணம் இருப்பதுபோல் இருந்ததால், அவர் திரும்பி வந்து தேடினால் அவரிடம் கொடுக்கலாம் என்று அப்பையை வைத்திருக்க முடிவுசெய்தேன்," என்றார் திருவாட்டி ஜேலின் வூன்.
ஜூரோங் வெஸ்டில் உள்ள அந்த காப்பிக் கடையில் மதிய உணவை சாப்பிட்ட அந்த ஆடவர் தமது பையை அங்கேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றார். அப்பையில் அவரது இளைய சகோதரரின் இறுதிச் சடங்கிற்கான $13,000 ரொக்கத் தொகை இருந்தது.
பையைத் தவறவிட்டதை உணர்ந்த அவர், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்தக் காப்பிக் கடைக்குத் திரும்பி வந்தார். பை கிடைக்காது என்றே அவர் நினைத்திருந்தார்.
ஆனால், 'ஹொங் ஜி கிளேபாட் ஹெர்பல் பக் குத் தே' கடையில் பணிபுரியும் திருவாட்டி ஜேலின் வூன் அந்தப் பையை அவரிடம் கொடுத்தார்.
தம்மை திரு பே என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட அந்த ஆடவர், திரும்பி வந்தபோது மிகவும் படபடப்போடு என்னசெய்வதென்று தெரியாமல் தடுமாறி நின்றதாக திருவாட்டி வூன் கூறினார்.
"எனக்கு நன்றி தெரிவித்த அவர், அப்பணம் தமது தம்பியின் இறுதிச் சடங்கிற்காக வைத்திருந்தது என்று கூறினார்," என்றார் திருவாட்டி வூன்.
தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில், அந்தக் கடை குறித்து தமது நண்பர்களிடம் சொல்வதாக திரு பே கூறியதாக திருவாட்டி வூன் சொன்னார்.
"என் மாமா அவநம்பிக்கையுடன் இருந்தார். அவரது பை கடையில் இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, திருவாட்டி வூன் பையைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதிலிருந்த பணம் அனைத்தும் அப்படியே இருந்தது," என்று திரு பேயை தமது உறவினர் என்று குறிப்பிடும் ஒரு ஸ்டோம்ப் வாசகர் தமது ஸ்டோம்ப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

