பெரிய புதிய தனியார் குடியிருப்பான 'சீனெகா ரெசிடென்ஸ்' சீனப் புத்தாண்டுக்கு சற்று முன்னதாக விற்பனைக்கு விடப்பட்டதால் ஜனவரி மாத புதிய தனியார் வீடுகளின் விற்பனை 392ஆக உயர்ந்தது.
இது டிசம்பர் மாதத்தின் 170 விற்பனை எண்ணிக்கையைவிட பெரிதும் அதிகம்.
தானா மேரா கெச்சில் லிங்கில் உள்ள 268 வீடுகளைக் கொண்ட இந்த புதிய தனியார் குடியிருப்பின் விற்பனையால் எக்ஸிகியூட்டிவ் கொண்டோமினியம் தவிர்த்த மேம்பாட்டாளர்களின் தனியார் வீட்டு விற்பனை டிசம்பர் மாதத்தைவிட 130 விழுக்காடு உயர்ந்தது.
இந்த ஆண்டின் முதல் அறிமுகமான சீனெகாவில் சதுர அடிக்கு சராசரியாக $2,083 என்ற விலையில் 157 வீடுகள் விற்பனையாகின.
இது ஜனவரி மாத விற்பனையில் 40.2 விழுக்காடு என்று ஹட்டன்ஸ் தெரிவித்தது.
எனினும், ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், 2022 ஜனவரி மாதம் விற்கப்பட்ட 684 வீடுகளுடன் ஒப்பிட இது 43 விழுக்காடு குறைவு என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித் துள்ளன.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட இது மெதுவான தொடக்கம் என்று சில சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறினர்.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்ட அறிவிப்பின்படி, நேற்று முதல் விலையுர்ந்த சொத்துகளுக்கும் குடியிருப்பு அல்லாத சொத்துகளுக்கும் வாங்குவோர் முத்திரை வரி அதிகரிக்கப்பட்டிருப்பது தனியார் சொத்து விற்பனைச் சூழலின் நிச்சயமற்ற நிலையை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

