ஒரு நிறுவனம், அரசாங்கத்திடம் இருந்து கொவிட்-19 வாடகைத் தள்ளுபடி நிவாரணமாக ஏற்கெனவே ரொக்க மானியத்தைப் பெற்றிருக்குமானால் அந்த நிறுவனம், அது தொழில் நடத்தும் இடத்தின் முதலாளியிடம் இருந்து மேலும் வாடகைத் தள்ளுபடியைப் பெற முடியாது.
இதற்கு அந்த நிறுவனத்திற்குத் தகுதி இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பில் தெரிவித்தார்.
ஜூரோங் நகராண்மைக் கழகமும் அதன் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அதில் தொழில் நடத்தும் 'ஹாட் ஸ்பிரிங் ஸ்டோன்' என்ற கல் பொருள்கள் விநியோக நிறுவனமும் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்த ஹாட் ஸ்பிரிங் ஸ்டோன் நிறுவனத்திற்கு உத்தரவிடும்படி கேட்டு ஜூரோங் கழகம் வழக்கைத் தொடுத்தது.
ஹாட் ஸ்பிரிங் ஸ்டோன் நிறுவனம் ஏற்கெனவே $123,360 ரொக்க மானியத்தைப் பெற்று இருந்தது. என்றாலும் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் ஜூரோங் கழகம் தனக்கு $95,467.62 வாடகைத் தள்ளுபடியைக் கொடுக்க வேண்டும் என்று அது கோரியது.
ஓர் இடத்தின் உரிமையாளர் என்ற முறையில் ரொக்க மானி யத்தைப் பெற்றுள்ள நிறுவனம், வாடகையாளர் என்ற முறையில் அதே தொழில் இடத்திற்கான வாடகைத் தள்ளுபடியைப் பெற இயலாது என தீர்ப்பு கூறியது.

