சீனாவைச் சேர்ந்த லி ஃபன்ஃபாங், 2020ஆம் ஆண்டில் ஹோங் சான் கோயில் சங்கத்தில் கணக்காளராக வேலைபார்த்தார்.
ஹவ்காங் அவென்யூ 3க்கு அருகில் உள்ள டெஃபு லேன் 12ல் அந்தக் கோயில் அமைந்திருக்கிறது.
அதில் பணிபுரிந்தபோது பல்வேறு காசோலைகளை முறைதவறிப் பயன்படுத்தியதன் மூலம் இவர் மொத்தம் $200,000க்குமேல் மோசடி செய்தார்.
அந்தத் தொகை அனைத்தையும் லி சூதாட்டத்தில் இழந்துவிட்டார்.
குற்றவுணர்ச்சி ஏற்பட்டதால் கோயில் ஊழியர்களுக்குத் தன் தவறு குறித்துக் கடிதம் அனுப்பிவிட்டு, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் இவர் ஹாங்காங்கிற்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
ஆனால், சிங்கப்பூரரான தனது கணவரையும் மூன்று வயது மகனையும் பிரிந்திருக்க இயலாமல், ஆறு நாள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்தார்.
பின்னர் கணவரின் அறிவுரையை ஏற்று காவல்துறையிடம் சரண் அடைந்ததாக 32 வயதாகும் லி கூறினார்.
முன்னதாக, காசோலைகளில் கோயில் செயலாளர், கருவூல அதிகாரி ஆகியோரின் கையொப்பங்களைப் பெற்ற பிறகு அவற்றில் பணம் செலுத்தப்படவேண்டியோரின் பெயர்களை மாற்றி லி தன் பெயரை அங்கு எழுதிக்கொண்டதாகக் கூறப்பட்டது. பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற இது உதவியது.
இதற்காக, அழிக்கக்கூடிய மை நிரப்பிய பேனாவைத் திட்டமிட்டு வாங்கிப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்த லி தன் பணத் தேவைக்காக இவ்வாறு மோசடி செய்ததாகக் கூறினார்.
இதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் நேற்று அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

