பெண்களின் ஆபாசப் படங்கள் இடம்பெறும் 'டெலிகிராம்' குழு குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இக்குழுவில் பொய்யாக மாற்றியமைக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் பரவுவதாகவும் இவற்றில் உள்ள பெண்களில் சிலர் சிங்கப்பூரர்கள் என்றும் கூறப்படுகிறது.
'எஸ்ஜிவிக்கிலீக்ஸ்' எனும் குழு குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கத் திட்டமிடுவதாகக் கூறினார் ஜோர்டெலியா டான் எனும் 23 வயதுப் பெண்.
சீனப் புத்தாண்டையொட்டி தானும் தனது தோழிகளும் 'சியோங்சாம்' எனும் பாரம்பரிய உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இவர் 'இன்ஸ்டகிராமில்' பதிவிட்டார். அப்படம் பின்னர் மென்பொருள் உதவியுடன் மாற்றியமைக்கப்பட்டு, பாரம்பரிய உடையில் இருந்த பெண்கள் அனைவரும் ஆபாச உடையணிந்து காணப்படுவதுபோல் 'டெலிகிராம்' குழுவில் பகிரப்பட்டது.
வேறொருவர் மூலம் இதுகுறித்துத் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்ததாக் கூறினார் திருவாட்டி டான்.
'எஸ்ஜிவிக்கிலீக்ஸ்' எனும் பெயரில் வெவ்வேறு 'டெலிகிராம்' குழுக்கள் இருப்பதாகவும் இவற்றில் பல்லாயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவற்றில் ஒரு குழுவில் சேர $333 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்கிருந்து இக்குழு செயல்படுகிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் சிங்கப்பூர் பெண்களின் ஆபாசப் படங்களை இதில் காணலாம் என்று இக்குழு கூறுகிறது.