கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று பிரசாரம் செய்த 'ஹீலிங் த டிவைட்' குழுவைத் தோற்றுவித்த ஐரிஸ் கோ (படம்) மீது நேற்று மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தவறான தகவல் தந்ததன் தொடர்பில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது.
ஜிப்சன் குவா எனும் 34 வயது பொதுமருத்துவருடன் இணைந்து திருவாட்டி கோ 2021ஆம் ஆண்டில் ஐந்து சம்பவங்களில் பொய்யான தகவல் தந்தார்.
ஐவருக்கு சைனோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சிற்குத் தகவல் அனுப்பப்பட்டது. உண்மையில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
ஐவருக்கும் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழைப் பெறுவதற்காக இவர்கள் இவ்வாறு பொய்யுரைத்தனர்.
திருவாட்டி கோ மீது, தடுப்பூசி குறித்து தவறான தகவல் தரும் சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஐந்து குற்றச்சாட்டுகளும் பொய்யான ஆதாரங்களுக்கு ஏற்பாடு செய்ததன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
இவர் 2021 நவம்பரில் டீ ஹுய் யீ என்பவருக்கு மனநலக் குறைவு இருப்பதாகப் பொய்யான சான்றிதழ் பெறத் தூண்டுதலாக விளங்கியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவர் குவா நோயாளிகளுக்குத் தவறான அளவில் சைனொஃபார்ம் தடுப்பூசியைச் செலுத்தினாரா என்பதன் தொடர்பில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
திருவாட்டி கோ மீது இதுவரை மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நேற்று அவர் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் இன்று இடம்பெறும்.
முன்னதாக, தான் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினர் தனது மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களைத் தவறாகக் கையாண்டதாகத் திருவாட்டி கோ புகாரளித்திருந்தார். அந்தப் புகாரை சென்ற மாதம் 9ஆம் தேதி மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் நிராகரித்தது.
மருத்துவர் குவா பொய்யான கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தியதன் தொடர்பில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர்மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை.