எண்ணெய் சாரா ஏற்றுமதி ஜனவரியில் 25 விழுக்காடு குறைந்தது
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி ஜனவரியில் தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்துள்ளது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதைத் தெரிவித்தன. சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகள் சிலவற்றில் தேவை வேகமாகத் தணிந்துள்ளது அதற்குக் காரணமாகும்.
2022 ஜனவரியைவிட இவ்வாண்டு ஜனவரியில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 25 விழுக்காடு குறைந்தது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் டிசம்பரில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.6 விழுக்காடு குறைந்தது. அதைவிட ஜனவரியில் ஏற்றுமதி மோசமாகச் சரிந்தது. புளும்பெர்க் கணக்காய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 22 விழுக்காடு சரிவைவிடவும் இது பெரிய வீழ்ச்சியாகும்.
ஜனவரியில் $14.5 பில்லியன் மதிப்புள்ள எண்ணெய் சாரா ஏற்றுமதி இடம்பெற்றது. இது டிசம்பரில் ஈட்டப்பட்ட $14.3 பில்லியனைவிட சற்று அதிகம் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியது.
ஆனால் 2022ன் மாதாந்திர சராசரி $16.6 பில்லியன் ஏற்றுமதியைவிட இது குறைவு.
மின்னணுவியல் ஏற்றுமதி, மின்னணுவியல் சாரா ஏற்றுமதி இரண்டுமே குறைந்தன.
உள்நாட்டு ஏற்றுமதிகளில் கால்வாசிப் பங்கு வகிக்கும் மின்னணுவியல் பொருள்களின் ஏற்றுமதி 2022 ஜனவரியைவிட இவ்வாண்டு ஜனவரியில் 26.8 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. டிசம்பரில் அது 17.9 விழுக்காடு குறைந்திருந்தது.
ஜனவரியில் மின்னணுவியல் ஏற்றுமதி குறைந்ததற்கு ஒருங்கிணைந்த மின்சுற்று, வட்டு ஊடகப் பொருள்கள், கணினிப் பாகங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவு மிகப் பெரிய காரணமாக இருந்தது. மின்னணுவியல் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து ஆறு மாதங்களாகக் குறைந்துள்ளதாகவும் 2020 மார்ச்சுக்குப் பிறகு மின்னணுவியல் ஏற்றுமதியின் மதிப்பு முதல்முறையாக $3 பில்லியனுக்குக் கீழே குறைந்துள்ளதாகவும் யுஓபி வங்கியின் மூத்த பொருளியல் நிபுணர் ஆல்வின் லியூ கூறினார்.
2022 ஜனவரியைவிட சென்ற ஜனவரியில் மின்னணுவியல் சாரா ஏற்றுமதி 24.5 விழுக்காடு குறைந் தது. ஒப்புநோக்க டிசம்பரில் அது 21.3 விழுக்காடு குறைந்தது. மருந்து ஏற்றுமதி மட்டுமே ஆண்டுக்கு ஆண்டு அடிப்படை யில் ஜனவரியில் 22.8 விழுக்காடு அதிகரித்தது.

