பெருந்தொற்றின்போது மகப்பேற் றுக்குப் பிந்தைய மனச்சோர்வு ஏற்பட்ட சம்பவங்கள் அதிகரித்ததை கவனித்த கேகே மகளிர் சிறார் மருத்துவமனை, மகளிர்க்கான புதிய மருத்துவ வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள், புதிய தாய்மாருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க பரிசோதனைகள் முக்கியம் என்பதை வழிகாட்டிகள் கூறும்.
2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான காலகட்டத்தைவிட 2020 ஏப்ரல் முதர் மார்ச் 2021 வரை மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு ஏற்பட்ட சம்பவங்கள் 47 விழுக்காடு உயர்ந்ததாக கேகே மருத்துவமனை கூறியது.
கொவிட்-19 தொற்று முன்னர் மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வால் சிங்கப்பூரில் 14 பெண்களில் ஒருவருக்கும் எட்டு பெண்களில் ஒருவருக்கும் கருவுற்ற போது மனச்சோர்வு ஏற்பட்டது.
கருவுற்றவர்கள், புதிய தாய்மார் ஆகியோர் என 600 பெண்களிடம் ஆய்வு நடத்திய கேகே மருத்துவமனை, ஆறு பேரில் ஒருவர்தான் மனச்சோர்வு அறிகுறிகள் தென்பட்டால் உதவி நாடுவர் என்று கண்டறிந்தது.
ஐவரில் மூவர் மருத்துவர் தங்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவில்லை என்று கூறினர்.
மகப்பேறு மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், 90 விழுக்காட்டுத் தாய்மார் பிள்ளைப்பேற்றுக்குப் பின் மனச்சோர்வு அறிகுறிகளைப் பற்றி மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை என்று கூறியது.
வழிகாட்டிகளை நேற்று நடந்த ஆசிய பசிபிக் பிள்ளைப்பேறு, குழந்தைநல மாநாட்டில் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி வெளியிட்டார்.
மனநலன் மாற்றங்களையும் பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கண்டுகொள்ளத் தேவையான திறன் களையும் பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் வழங்குவது முக்கியம் என்பதை ஆய்வு காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

