இந்திராணி ராஜா: குடும்பங்களுக்காக
புதிய சிங்கப்பூர் உருவாகும் அறிகுறிகள்
திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றை ஊக்குவிக்கவும் சமுதாயக் கட்டிறுக்கத்தை வலுப்படுத்தவும் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தெளிவாகத் தெரியும் சில கருப்பொருள்கள் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா கூறியுள்ளார். வரவுசெலவுத் திட்டம் பற்றி மணிஎஃப்எம் 89.3 வானொலி நேற்று முன்தினம் நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் பேசினார்.
அரசாங்கம் பல்வேறு தரப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது தாய்மாரின் மகப்பேறு விடுப்பைவிட தந்தையரின் விடுப்பு பற்றி அதிகம் பேசப்பட்டதாக குமாரி இந்திராணி குறிப்பிட்டார். அதனால்தான் அரசாங்கம் தந்தையருக்கான விடுப்பை அதிகரித்ததாக அவர் சொன்னார். அரசாங்கம் ஒரு சமுதாய மாற்றத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ததாக குமாரி இந்திராணி கூறினார்.
"நம் கண்முன்னே நடக்கும் மாற்றமாக இதைக் கருதவேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் இதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் சமுதாயம் மாறி வருகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை இது புதிய சிங்கப்பூரின் தொடக்கம்," என்றார் அவர்.
புகைப்படத்துக்காக நின்றபோது
புக்கிட் தீமா வனப்பகுதியில் மாண்ட மாது
அப்பர் புக்கிட் தீமா வனப்பகுதியில் மாண்ட 48 வயது மாது, புகைப்படங்களுக்காக நின்றுகொண்டிருந்தபோது அவர்மீது காங்கிரீட் பாளம் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளுக்குத் தாயான மெல்லிட்டா டோலாவின் மரணம் பற்றிய விசாரணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2021 டிசம்பர் 19ஆம் தேதி காலை திருவாட்டி மெலிட்டாவும் அவரது நான்கு நண்பர்களும் அங்கு மலையேறச் சென்றனர். கம்போங் மென்டோஸா எனும் முன்னைய கம்பத்தின் எச்சங்கள் அங்குள்ளன. பொதுமக்கள் நுழைய முடியாத அந்த இடத்தில் தடுப்புகளோ அறிவிப்புப் பலகைகளோ இல்லை.
ஒரு கட்டடத்தில் காங்கிரீட் பாளத்துக்கு முன்னால் திருவாட்டி மெலிட்டாவும் பின்னால் அவரது தோழியும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காங்கிரீட் பாளம் திருவாட்டி மெலிட்டாவின் மேற்பகுதியின்மீது விழுந்தது. நண்பர்கள் அவரை விடுவித்தனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாண்டதாகத தெரிவிக்கப்பட்டது.

