நோயாலும் வலியாலும் தடுக்கமுடியாத தேர்ச்சி

நோயாலும் வலியாலும் தடுக்கமுடியாத தேர்ச்சி

2 mins read
3da1c8c8-e8ba-4169-a412-f584805c4871
-

ஆ. விஷ்ணு வர்தினி

குணப்­ப­டுத்த முடியாத நோயான 'பாலி­சிஸ்­டிக்' சிறு­நீ­ரக நோய், 18 வயது நர்­ம­தா­வுக்கு என்­றைக்­கும் ஒரு தடை­யாய் இருந்ததில்லை.

இந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு, வய­தாக ஆக சிறு­நீ­ர­கங்­கள் இரண்­டும் அள­வில் பெரு­கும். நர்மதாவின் சிறுநீரகங்கள் தற்­போது சாதா­ரண சிறு­நீ­ரக அளவைவிட கிட்­டத்­தட்ட ஒன்­றரை மடங்கு அதிகமாக வீங்கிப் பெரிதாகி உள்ளன. அதனால் பல சிக்­கல்­கள் ஏற்­பட்டு தமது தொடக்­கக் கல்­லூரி பருவத்தில் அலைக்­க­ழிக்­கப்­பட்­டார் நர்­மதா.

இத்­த­கைய இடை­யூ­று­க­ளைத் தாண்டி, நேற்று வெளி­யான பொதுக் கல்­விச் சான்­றி­தழ் மேல்­நிலை தேர்­வில் நர்­மதா தேர்ச்சி பெற்­றுள்­ளார். சிறுவர், அல்­லது குற்­ற­வா­ளி­க­ளுக்­கான உள­வி­ய­லா­ள­ரா­கும் கன­வு­டன் நடை­போடு­கி­றார் அவர்.

நர்மதாவின் மூன்று வயதில் இந்நோய் கண்டறியப்பட்டது. தமது முது­கு­த்தண்­டில் இரு சிறு­நீ­ர­கங்­களும் அழுந்­தும் கார­ணத்­தால், நர்­ம­தா­வுக்கு நீண்ட நேரத்­துக்கு அமர்ந்­தி­ருப்­ப­தும் நடப்­ப­தும் அதிக வலியை ஏற்­ப­டுத்­தும்.

இருப்பினும், தின­மும் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் ஒன்­றரை மணி நேரம் செல­விட்டு ஜூரோங் பைனி­யர் தொடக்­கக் கல்­லூரிக்கு அவர் சென்று வந்­தார்.

நீண்ட நேரம் நீடித்த வகுப்புகளில் வலி­யைப் பொறுத்துக்­கொண்டு அமர்ந்­து இ­ருந்­தார். கடந்த ஈராண்­டு­க­ளி­லேயே, நர்மதா மூன்று முறை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். குறிப்­பாக, மேல் நிலை தேர்வு எழு­திய 2022ஆம் ஆண்டு நர்­ம­தா­வுக்கு நிறைய மேடு­பள்­ளங்­கள் இருந்­தன.

தொடக்­கப்­பள்ளி முடி­வில் தந்தை விட்­டுச்­சென்­ற பிறகு ஒற்­றைத் தாயா­ரால் வளர்க்­கப்­பட்ட. நர்­மதா, தாத்தா திரு கண­ப­தியை அதிகம் நேசித்து வந்தார். ஆனால் ஜூலையில் தாத்தா மார­டைப்­பால் காலமானார்.

அந்த இ­ழப்­பி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­குள்­, காய்ச்­சல் தொற்று ஏற்­பட்டு நர்மதா மருத்­து­வ­ம­னை­யில் ஒரு வாரம் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

மேல்நிலை முன்­னோட்­டத் தேர்­வில் கிட்­டத்­தட்ட அனைத்துத் தேர்­வு­க­ளை­யும் நர்­ம­தா­வுக்கு எழுத முடி­யா­மல் போனது.

அப்­போ­தும் நர்மதா மனம் தளரவில்லை என்று அவரது வகுப்­பா­சி­ரி­யர் திரு­வாட்டி குண­செல்வி முனுசாமி சுட்டினார்.

"நர்­மதா தனது மருத்­துவச் சிக்­கல்­கள் குறித்து ஒரு­போ­தும் புலம்­பி­ய­தில்லை. மருத்­து­வ­ம­னை­யில் இருந்­து­கொண்டே அவர் பாடக்­கு­றிப்­பு­களையும் சந்­தே­கங்­களையும் கேட்­டுத் தெரிந்து கொள்வார்," என்­றார் அவர்.

மேல்நிலை தேர்­வுக்கு முந்­தைய வாரம் கொவிட்-19 தொற்­றும் ஏற்­பட்டு முடங்­கிய நர்­மதா, தனது இன்­னல்­க­ளைக் கையாண்­டது குறித்து கூறியபோது, "என் தாத்தா அடிக்கடி சொன்னதுபோல, வெள்­ளைச் சுவ­ரில் சிறு கருப்­புப் புள்­ளி­க­ளைப் போலவே இந்த சிக்­கல்­க­ளைக் கரு­தி­னேன். எப்­போ­தும் நிறை­க­ளைக் காணவே அவர் என்னை ஊக்­கு­வித்தார். இன்று அவர் இருந்­தி­ருந்­தால் எனது தேர்ச்­சி­யில் பெரு­மி­தம் கொண்­டி­ருப்­பார்," என்­றார்.

மேல்நிலைத் தேர்வு முடி­வு­ க­ளை நேற்று பெற்­றுக்­கொண்ட 10,930 மாண­வர்­க­ளுள் நர்­ம­தா­வும் ஒரு­வர்.

மொத்­தம் 93.4 விழுக்­காட்­டி­னர், 10,206 மாணவர்கள், குறைந்­த­பட்­சம் மூன்று 'எச்2' பாடங்களில் தேர்ச்­சியையும் பொதுத்­தாள் அல்­லது அறி­வு­சார் ஆய்­வி­யல் பாடத்­தில் தேர்ச்­சி­யை­யும் அடைந்­த­தாக நேற்று கல்வி அமைச்சும் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்டு வாரி­யமும் கூறின.